ஒரு நாளில் சராசரியாக 145 பேருக்கு டெங்கு பாதிப்பு!

ஒரு நாளில் சராசரியாக 145 பேருக்கு டெங்கு பாதிப்பு!

இலங்கையில் நாளொன்றுக்கு அண்ணளவாக 145பேர் டெங்குநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதாரப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை 28ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 4,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த 28 நாட்களுக்குள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 04 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் ஜனவரி 01ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் இதுவரையான காலப்பகுதிக்குள் 32,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நாடுமுழுவதும் தற்போது மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில், டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் 22 பிரதேச செயலகப் பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதாரப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,

நாட்டில் இம்மாதம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 4062 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 3,319 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அந்தவகையில் கடந்த மே மாதம் 2,647 பேரும் ஏப்ரலில் 2,234 பேரும் மார்ச்சில் 3,615 பேரும் பெப்ரவரி மாதத்தில் 06ஆயிரத்து 07 பேரும் மற்றும் ஜனவரி மாதம் 10,417 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேல் மாகாணத்தில் இதுவரை 12,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 7,613 பேரும் 
கம்பஹாவில் 3,453 பேரும் 
களுத்துறையில் 1,781 பேரும் 
யாழ்ப்பாணத்தில் 4023 பேரும் 
கண்டியில் 2,670 பேரும் 
குருநாகலையில் 1,391 பேரும் 
புத்தளத்தில் 834 பேரும் 
காலியில் 1,451 பேரும் 
கேகாலையில் 1,321 பேரும் 
இரத்தினபுரியில் 2021 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.