சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை - டயானா கமகே!
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே எச்சரித்துள்ளார்.
அண்மையில் விற்பனையாளர் ஒருவர் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு அதிக விலைக்குக் கொத்து ரொட்டியை விற்பனை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் முட்டாள்கள் அல்ல, அவர்களை ஏமாற்ற முடியாது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், விருந்தோம்பல், நட்புறவு மிக்க சுற்றுலாத் தலமாக உள்ள இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் என்று கோரியுள்ளார்.
அத்துடன், ஏனைய சக வர்த்தகர்களின் வாழ்வாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்காமல் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அவர் வர்த்தகர்களை வலியுறுத்தியுள்ளார்.