காரை எக்ஸ்பிரஸ் ​எரிந்தமை குறித்து தவறான கருத்துகளை வௌியிட வேண்டாம் - பேருந்து உரிமையாளர்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து புத்தளம் பகுதியில் தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் மாறுபட்ட செய்திகளை வெளியிட்டுள்ளதாக விபத்தில் எரிந்த காரை எக்ஸ்பிரஸ் பேருந்தின் உரிமையாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் உண்மையை அறிந்து செயற்பட வேண்டும் என்பதுடன் தவறான செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக காவல்துறை மா அதிபரிடம் எதிர்வரும் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தி.துவாரகேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்து புத்தளம் – மதுரங்குளி செம்பட்டை பகுதியில் ஜுன் 30ம் திகதி அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் முழுமையாக எரிந்து நாசமாகியது.

எனினும், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் காயங்களோ, உயிருக்கோ, உடமைக்கோ சேதங்கள் ஏற்படவில்லை.

விபத்தின் போது பேருந்து சாரதியும் நடத்துனரும் துணிகரமாக செயற்பட்டு பேருந்தில் பயணித்தவர்களை காப்பாற்றினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரு சில ஊடகங்கள் பேருந்து திட்டமிட்டு எரிக்கப்பட்டதாக அடிப்படையற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. செய்தி தொடர்பாக தெளிவு வேண்டியவர்கள் காவல்துறை மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை தொடர்பு கொள்ளலாம். பயணித்த 43 பேரின் விபரங்களையும் தர நான் தயார். அவர்களிடமே நடந்தவற்றை கேட்டறிய முடியும்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் உண்மையை அறிந்து செயற்பட வேண்டும் என்பதுடன் தவறான செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக காவல்துறை மா அதிபரிடம் எதிர்வரும் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளேன்" என்று தெரிவித்தார்.