சென்னையில் 'எடிசன் திரை விருது' விழா மார்ச் 24இல்!

உலகத் தமிழர்களால் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாக்குகளை பெற்று நிகழ்த்தப்படும் 'எடிசன் திரை விருதுகள்' சென்னை வர்த்தக மையத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியீடு கண்ட திரைப்படங்கள், தியேட்டர் மற்றும் OTT தளங்களில் வெளியீடு கண்ட திரைத்துறை சார்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், கலை இயக்குநர்கள், சண்டை பயிற்சியாளர்கள், நடன இயக்குநர்கள் போன்றோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் கடந்த காலங்களில் எடிசன் திரை விருது பெற்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், கனடா, அவுஸ்திரேலியா, லண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசிய நாடுகளிலிருந்து திரைக் கலைஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இக்கலைஞர்கள் ஜான் பிரிட்டோ நடனக் குழுவுடன் இணைந்து கலை நிகழ்ச்சிகளை இதன்போது நிகழ்த்தவுள்ளனர்.
பார்வையாளர்களாக எடிசன் விருதுக்கு வாக்களித்த ரசிகர்கள், தமது ஆவணத்தைக் காட்டி இந்த விருது விழாவில் கலந்துகொள்ள முடியும் என எடிசன் விருது குழுத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.