சமூக ஊடகத்தில் போலி ஆவணம்!

சமூக ஊடகத்தில் போலி ஆவணம்!

சமூக ஊடகங்களில் உலா வரும் போலி ஆவணமொன்று தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

தர்மசக்கரம் அடையாளத்துடன் நீல நிறத்தினாலான பொலிஸ் கையொப்பம், இறப்பர் முத்திரை மற்றும் பொலிஸ் முத்திரையுடன் மஞ்சள் நிறத்தினாலான பின்புலத்தில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் 2024ம் ஆண்டு ஜூலைமாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டது என தெரியப்படுத்தும் வகையில் ஆங்கில மொழியில் குறித்த ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் உட்பட அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் அனைத்தும் முற்றிலும் போலியானவை எனவும் இலங்கை பொலிசினால் அல்லது அதற்கு இணையான நிறுவனமொன்றினால் இதுபோன்று எந்தவொரு ஆவணமும் வெளியிடப்படவில்லையென பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காக குறித்த போலி ஆவணம் தொடர்பிலான பிரதியொன்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதனை இங்கு காண முடியும்.