ஹெய்ட்டி சிறை மீது தாக்குதல் - பல கைதிகள் தப்பியோட்டம்!
ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலை மீது ஆயுதமேந்திய குழுவொன்று தாக்குதல் நடத்தி பல கைதிகளை விடுவித்துள்ளது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 ஆயிரம் ஆண் கைதிகளில் பெரும்பாலோர் இவ்வாறு தப்பியோடியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேர் காயமடைந்தனர்.
தப்பிச் செல்ல முயன்ற மூன்று கைதிகள் சிறைச்சாலை முற்றத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற கைதிகளில், 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோவெனல் மோஸசின் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஏரியல் ஹென்றியை பதவி நீக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் குழுவொன்று போர்ட்-ஓ-பிரின்ஸின் 80 சதவீதமான பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன.
வன்முறையின் அண்மைய எழுச்சி கடந்த வியாழக்கிழமையன்று தொடங்கியது.
கென்யா தலைமையிலான சர்வதேச பாதுகாப்புப் படையை ஹெய்ட்டிக்கு அனுப்புவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரதமர் நைரோபிக்குச் சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.