சர்வதேச கடன் வழங்குநர்கள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை!
சர்வதேச கடன் வழங்குநர்கள் அடுத்த வாரம் சந்தித்து இலங்கை போன்ற நாடுகளின் கடன் மறுசீரமைப்பு திட்டங்களில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பையும் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக இரண்டு முக்கிய தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஜி-20 நாடுகளின் பிரதிகளின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை மொரோக்கோவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டத்தில் மேலதிக விடயங்கள் குறித்து ஆராயப்படும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இலங்கை மற்றும் கானா போன்ற நாடுகள் அவற்றின் உள்நாட்டு கடனில் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
சர்வதேச கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்பின் போது உள்நாட்டு கடன் வழங்குநர்களுடன் சுமையை பகிர்ந்து கொள்வதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இது கடன் மறுசீரமைப்புக்கான சவால்களாக அடையாளம் காணப்பட்ட பல சிக்கல்களில் ஒன்றாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் உத்தியோகப்பூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள், கடன் பெறும் நாடுகள், உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.