பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி செய்கிறதா அரசு?

உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மனித உரிமை ஆணையகத்தில் இன்று முறைப்பாடு.
கடந்த 2025.04.29 அன்று கொழும்பு கொட்டாஞ்சேனை தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகா எனும் மாணவி கல்வி கற்று வந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதோடு அந்த நபராலும் இன்னும் சிலராலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்தும் தொந்தரவு செய்யப்பட்ட நிலையில்
தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான நீதியும் கிடைக்கவில்லை, நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்த இடங்களிலும் நீதி கிடைக்காது மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ஒரு சம்பவம் இலங்கை நாட்டை சோகத்திற்கு உள்ளாக்கி இருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை குறித்த சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்படவோ ,விசாரணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை எனவும் இந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு உரிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு
இவ்வாறான சம்பவம் இனி இந்த நாட்டில் எந்த மாணவர்களுக்கும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி கல்முனை மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன்.
அவரது முறைப்பாட்டில் குறித்த இந்த சந்தேக நபரான ஆசிரியர் ஆளும் தரப்பு அரசோடு மிக நெருக்கமாக இருக்கின்றவர் என்றும் அவ்வாறான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுவதோடு, நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட அவர் அரச தரப்பில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்ததன் அடிப்படையில் அவர் மீதான சட்ட ரீதியான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையும், குறித்த இந்த சம்பவம் தொடர்பில் ஆளும் அரசின் மகளிர் விவகார அமைச்சர் கெளரவ.சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களும் பாராளுமன்றத்திலே எதுவித பொறுப்புமற்ற விதத்தில், நியாயமற்ற விதத்தில், இந்த மாணவி மன நோயாளி என்பது போன்று ஒரு பாராளுமன்ற உரையினையும் நிகழ்த்தி இருந்தார். இவ்வாறான விடயங்கள் கண்டிக்கப்பட வேண்டியது உண்மையிலேயே இந்த மாணவியனுடைய அடிப்படை உரிமையை மீறுகின்ற அல்லது அவரை அவமதிக்கின்ற செயல் என்று அந்த பாராளுமன்ற உரையினையும் கண்டிப்பதோடு, கண்டிப்பாக உடனடியாக அந்த அமைச்சருடைய அந்த பேச்சுக்கான மன்னிப்பை அவர் கோர வேண்டும் எனவும், இந்த நாட்டினுடைய அமைச்சர் அவர் இவ்வாறு பொறுப்பற்ற விதமாக பேசக்கூடாது எனவும், உடனடியாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதோடு, குற்றத்திற்குத் துணை போனவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டு இனியும் இவ்வாறான சம்பவங்கள் இந்த நாட்டிலே இடம்பெறாத வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கு இலங்கை மனித உரிமை ஆணையகம் தலையீடு செய்து இந்தப் பிள்ளையின் சாவுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதோடு மாணவர் மற்றும் பெண்களது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு மனித உரிமையகம் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் எனவும் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.