மூடிக்கிடக்கும் களுதாவளை விசேட பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறப்பு - காதர் மஸ்த்தான்!

மட்டக்களப்பு - களுதாவளை கிராமத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மிகவிரைவில் திறந்து வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்த்தான் தெரிவித்துள்ளார்.

இன்று (14) மாலை அங்கு விஜயம் மேற்கொண்ட அவர், விசேட பொருளாதார மத்திய நிலையத்தைப் பார்வையிட்டதுடன், இதுவரையில் திறக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதனையடுத்து, பொருளாதார நிலையத்தை திறப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், விரைவில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2017ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2018 இல் முடிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆனாலும், அது இதுவரையில் திறந்து வைக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு அரசாங்கத்தின் நிதி வீணடிக்கப்படுவதென்பது பாரிய பிரச்சனையாகும். 

இதைத்தான் தற்கால இளைஞர்களும் தட்டிக் கேட்கின்றார்கள். எனவே நாம் இதனை விரைவாகத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டியுள்ளது.

பொருளாதார நிலையம் திறக்கப்படும் பட்சத்தில் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரிதும் நன்மை கிடைக்க வேண்டும். 

எனவே, சில பழுதுபார்ப்பு வேலைகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளை எமது அமைச்சினால் மேற்கொண்டு  இதனை விரைவில் திறந்து வைக்கவுள்ளோம்.

இருந்த போதிலும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் சிறப்பாக எவ்வாறு கையாளலாம் என்பது இப்பகுதி மக்களுடைய கையில்தான் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.