9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
களுத்துறை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்பாசனத் திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மக்களும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கண்டி, கேகாலை, கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட மற்றும் மதுகம ஆகிய பிரகேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 13 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்தில் 10 ஆயிரத்து 990 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.