வர்த்தகத்தில் ஈடுபடும் சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - மனுஷ நாணயக்கார
சுற்றுலா விசாவின் ஊடாக நாட்டுக்கு வருகைத்தந்து, நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலா தொழில் முயற்சியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி - கோட்டை மற்றும் மிரிஸ்ஸ போன்ற சுற்றுலாத்தளங்கள் தென் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு காணப்படுகின்றன.
இதனால் பிரதான சுற்றுலாத்தளமாக காலி காணப்படுகிறது.
குறித்த பகுதியில் பலர் சுற்றுலாத்துறை சம்பந்தமான தொழில்களில் ஈடுபட்டு வருவதுடன், சுற்றுலா விடுதிகள் மூலமும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், சுற்றுலா விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் விடுதிகளை வாடகை அடிப்படையில் பெற்று அவற்றை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு மீள வாடகைக்கு வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் இல்லாது போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, காலி – உனவடுன பகுதியில் இந்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நேற்று ஹபராதுவ பிரதேச செயலகத்துக்கு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.