புல்லுக்கு போராடும் கறவை மாடுகள்.. !
கிளிநொச்சியில் விவசாய நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுவதால் கறவை மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடும் வறட்சியான காலநிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிளிநொச்சியில் கறவை மாடுகளுக்குத் தேவையான புற்களை பெற்றுக்கொடுப்பதில் பால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் கறவை மாடுகளுக்கு புல் மேய்வதற்கு காணியொன்றை ஒதுக்கித்தருமாறு கோரி பால் பண்ணையாளர்கள் தங்கள் மாடுகள் மீது எதிர்ப்பு பதாதைகளை தொங்கவிட்டு போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் வசிக்கும் பால் பண்ணையாளர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ஒலுங்கேகிரிக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு மாடுகளை கொண்டு சென்று இவ்வாறு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பால் பண்ணையாளர்கள் கருத்து வெளியிடுகையில்,
விவசாய நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுவதால் கறவை மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாடுகளை மேய்ப்பதற்கு ஒரு பொதுவான காணியொன்று இல்லை.
மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்த முடியாதுள்ளதால் பால் உற்பத்தி 50% குறைந்துள்ளது.
ஆகவே, உடனடியாக அரசாங்கம் அல்லது உரிய தரப்பினர் தலையீடு செய்து தமக்கு மேய்ச்சல் காணியொன்றை ஒதுக்கி கொடுக்க வேண்டும்“ – என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக மாடுகளுக்கு புல்லை கொடுக்க முடியாமல் பால் உற்பத்தி பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கிளிநொச்சி பாற்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.