சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் வெளிவிவகார அமைச்சர்!

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் வெளிவிவகார அமைச்சர்!

தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது.

சுதந்திர தின நிகழ்வு குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், இலங்கையர்களாகிய நாம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கப் போராடியவர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்றதற்கான நினைவுகூறல் மட்டுமல்லாமல், ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதுமாக விளங்குகிறது.

இலங்கை நீண்ட காலமாக மீள்திறன் மற்றும் வலிமையின் சின்னமாக விளங்கி வருகிறது.

நமது வெளியுறவுக் கொள்கையானது, பரஸ்பர மரியாதை, இராஜதந்திரம் மற்றும் சர்வதேச சமூகத்துடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டில் உறுதியாக வேரூன்றியுள்ளதுடன், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமையையும் மேம்படுத்துகிறது.

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில், நமது பெருமைமிக்க பாரம்பரியத்தையும், எதிர்காலத்திற்கான நமது அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் வகையில், நமது இருதரப்பு மற்றும் பல்தரப்புக் கூட்டாண்மைகளை நாங்கள் தொடர்ந்து வலுவடையச் செய்கிறோம்.

நாட்டின் எல்லைகளுக்கு அப்பால், உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தொழிற்படையின் விலைமதிப்பற்ற பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பானது நமது சர்வதேச நன்மதிப்பை மேம்படுத்துவதுடன், நமது பொருளாதாரத்தையும் பலப்படுத்துகிறது.

எனவே, அவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வது முதன்மையானதொரு விடயமாகும்.

அதேபோல், நமது பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்கும் சுற்றுலாத் துறையானது, இலங்கையின் அபரிமித எழில் நிறைந்த இடங்கள் உயிர்த்துடிப்புள்ள கலாச்சாரம், முழு உலகிற்குமான அன்பு மிகுந்த விருந்தோம்பல் ஆகியவற்றின் ஒரு கூட்டு வெளிப்பாடாக தொடர்ந்தும் முன்நிற்கிறது.

நம்பிக்கையும், வாய்ப்புக்களும் நிறைந்த எதிர்காலமொன்றை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாம், இலங்கையின் உலகளாவிய நிலையை உயர்த்தவும். நிலையானதும், வளங்குன்றாததுமான நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முன்னேறிச் செல்லும் அதே வேளை, எமது கடந்த காலத்தை கௌரவிக்கும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

நாம் இலக்குகளாலும், தொலைநோக்காலும் ஒன்றுபட்டுச் செயற்படும்போது, செழுமை மிக்கதும், பரிபூரணமானதுமானதும், இவ்வுலகம் போற்றும் உன்னதமானதுமானதொரு இலங்கையை உருவாக்குவது நிச்சயம்.

இலங்கையானது, அதன் அனைத்து மக்களுக்கும், மனம்நிறைந்த அழகிய வாழ்க்கையை” உறுதி செய்யும் வளமானதொரு நாடாக முன்னிற்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.