பேருந்துகள் - முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் - நாமல் கோரிக்கை!
பயணிகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு விதிமுறைகளுடன் அனுமதிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழிலாகும்.
அதேபோன்று ஒரு கலை எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
அவற்றில் பயணிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் சட்டங்கள் மற்றும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அலங்கரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேருந்து சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்று மதியத்திற்கு பின்னர் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.