புத்தாண்டு விடுமுறை தொடர்பில் அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையின் போது கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு (State Ministry of Provincial Councils and Local Government Affairs) அரச ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.
அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மேலும், 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறை காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில், பேரிடர் மற்றும் அவசர அத்தியாவசியப் பணிகளைச் சமாளிப்பது தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை இவ்விடுமுறைக் காலத்தில் இடையூறு இன்றி பராமரிக்கும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குமான விரிவான வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.