சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்படவுள்ளது!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையொப்பமிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அவநம்பிக்கை பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்டவற்றின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள இந்த அவநம்பிக்கை பிரேரணை, நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குமார குலரத்னவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம், குறித்த அவநம்பிக்கை பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்பட்டு 5 வேலை நாட்களின் பின்னர் அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர், குறித்த பிரேரணையை விவாதிப்பதற்கான திகதியை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானிக்கும் எனவும் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குமார குலரத்ன குறிப்பிட்டார்.
இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை புறக்கணித்து, ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் இந்த அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்துள்ளன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை பக்கச்சார்பற்ற முறையில் பாதுகாக்க வேண்டிய சபாநாயகர், அந்த பதவிக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறித்த அவநம்பிக்கை பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளன.