திருடர்களுடன் இணையப் போவதில்லை - ரணிலை சாடிய சஜித் பிரேமதாச!

திருடர்களுடன்  இணையப் போவதில்லை - ரணிலை சாடிய சஜித் பிரேமதாச!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிகரமான அரசியல் பயணத்தை தடுப்பதற்காக அரசியல் நயவஞ்சகர்கள் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இதன்போது, கருத்து வெளியிட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் சொத்துக்களை திருடிய திருடர்களுடன் தாம் ஒருபோதும் இணைந்து செயல்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் இணைய போவதில்லை எனவும், முன்னதாக அவரது கோரிக்கையை ஏற்று இணைந்திருந்தால் கெஹெலிய ரம்புக்வெல்ல போன்றவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

220 இலட்சம் குடிமக்களுக்கும் பொறுப்புக்கூறக் கூடிய சரியான திசையில் பயணிக்கும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் அரசாங்கத்தை தாம் அமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முடியாட்சி தருவதாக கூறினாலும் ராஜபக்ஷக்களின் வாயில்காப்பாளராக செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டிலுள்ள பிரஜைகள் மற்றும் வர்த்தகர்களின் தனிப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி விரும்புவதில்லை என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.