O/L பரீட்சை இன்று ஆரம்பம்; பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்ள விசேட ஏற்பாடு

O/L பரீட்சை இன்று ஆரம்பம்; பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்ள விசேட ஏற்பாடு

2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,663 நிலையங்களில் நடைபெறவுள்ள இப் பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் தோற்றவுள்ளதாக இலங்கைப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 75,965 தனியார் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளரின் அறிக்கை

பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் அவர்,

பரீட்சாத்திகள் நாளை (இன்று) காலை உரிய நேரத்திற்கு முன்பதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறும் தேவையான உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்வதுடன் தேவையற்ற உபகரணங்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தனார்.

மேலும், பரீட்சைகளுக்கான விதிமுறைகளை மீறி எவராவது செயற்பட்டால் அது பரீட்சை குற்றமாக கவனத்திற் கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு 5 வருடங்களுக்கு பரீட்சைக்கான தடை விதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர, ”நாடளாவிய ரீதியில் 3663 பரீட்சை நிலையங்களில் நாளை பரீட்சை நடைபெற வுள்ளன. குறிப்பாக வடக்கிலும் மாணவர்கள் இலகுவாக பரீட்சைக்கு தோற்றும் விதத்தில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் இரத்மலானை, தங்கல்ல, மாத்தறை, சிலாபம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு மெகசின் சிறைச்சாலை, வட்டரக்க சுனீத வித்தியாலயம் ஆகியவற்றில் சிறைக் கைதிகளுக்காகவும் புனர்வாழ்வு பெற்று வரும் மாணவர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்காக பரீட்சை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் – அவர் தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவிப்பு

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத வானிலையால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்த்து, பரீட்சையை நடத்துவதற்கு ஒரு சிறப்பு கூட்டுத் திட்டத்தை அமுல்படுத்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும், பேரழிவுகள் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு இடையூறுகளையும் தடுக்கவும், O/L தேர்வுகளுக்குத் தோன்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை இந்த கூட்டுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய ஏதேனும் இடையூறுகளை நிர்வகிக்க, தேர்வுத் துறை, முப்படைகள், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பிற தரப்பினருடன் ஒருங்கிணைந்து, DMC ஏற்கனவே தொடர்புடைய துறைகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அவசரநிலை ஏற்பட்டால், மாணவர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் பின்வரும் எண்களில் DMC-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

• DMC இன் துரித எண்: 117

• DMC இன் சிறப்பு கூட்டு அவசரகால செயல்பாட்டு அறை எண்கள்:

0113 668 020

0113 668 100

0113 668 013

0113 668 010

076 3 117 117

• பரீட்சைகள் திணைக்கள துரித எண்: 1911