மீட்டியகொட பகுதி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் பத்தேகம வீதியில் உள்ள மானம்பிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (03) இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் மீட்டியாகொட, மானம்பிட்ட பகுதியைச் சேர்ந்த சரத் சமிந்த உதய குமார என்ற 47 வயதுடைய நபர் ஆவார்.
காயமடைந்த நபர் 52 வயதான மஹதுர நளின் வசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தற்போது பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு, காயமடைந்த மஹதுர நளின் வசந்த மற்றும் அம்பலாங்கொட பிரதேச சபைக்கு சுயேச்சை அணியில் போட்டியிடும் மஹதுர இசுரு டில்ஷான் ஆகியோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மஹதுர நளின், 2015 ஆம் ஆண்டு தனிப்பட்ட தகராறில் நடந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற உணவகத்தின் உரிமையாளரும் அம்பலாங்கொடை பிரதேச சபைக்கு சம்பந்தப்பட்ட சுயேச்சைக் குழுவிலிருந்து போட்டியிடும் வேட்பாளர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த துப்பாக்கிச் சூடு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை எனவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மீட்டியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.