பிரேசிலிலிருந்து கோழி இறக்குமதிக்குத் தடை

பிரேசிலில் இருந்து கோழி இறக்குமதிக்கு முழு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, அல்பேனியா மற்றும் நமீபியா ஆகியவை இணைந்துள்ளன, அதே நேரத்தில் அங்கோலா மிகவும் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டைத் தேர்ந்தெடுத்து, பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்திலிருந்து மட்டுமே கொள்முதல் செய்வதைத் தடை செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கோழி ஏற்றுமதியாளரான பிரேசிலிலுள்ள கோழிப் பண்ணையொன்றில் பறவைக் காய்ச்சல் முதன்முதலில் பரவியதை உறுதிப்படுத்தியதை அடுத்து, நேற்று முன்தினம் (23) முதல் இந்தத் தடை அமுலுக்கு வந்துள்ளது.
பிரேசிலின் விவசாய மற்றும் கால்நடை அமைச்சரகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிக்கோ, ஈராக், தென் கொரியா, சிலி, பிலிப்பைன்ஸ், தென்னாபிரிக்கா, ஜோர்தான், பெரு, கனடா, டொமினிகன் குடியரசு, உருகுவே, மலேசியா, ஆர்ஜென்டினா, கிழக்கு திமோர், மொராக்கோ, பொலிவியா, இலங்கை, பாகிஸ்தான், அல்பேனியா, நமீபியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பிரேசிலிய கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளன.
பிரேசிலில் இருந்து வரும் அறிக்கைகளின்படி, விவசாய மற்றும் கால்நடை அமைச்சரகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அனைத்து தொழில்நுட்ப தகவல்களையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.