மட்டக்களப்பில் வீதியை ஆக்கிரமித்துள்ள வெள்ளம் - குளங்களின் அவசர தவுகள் திறப்பு!

வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி தற்போது அதிகரித்துள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதையும், அவதானிக்க முடிகின்றது. அதிகளவு வெள்ள நிலைமையால் பல ஏக்கர் வயல்நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் வீதியை ஆக்கிரமித்துள்ள வெள்ளம் - குளங்களின் அவசர தவுகள் திறப்பு!

இந்தநிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் இரண்டு இடங்களை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பயணிகளும் பொதுமக்களும், மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களில் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 9அங்குலமாகவும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம், 16அடி 6 அங்குலமாகவும் உயர்ந்துள்ளன.

வாகனேரி குளத்தின் நிர்மட்டம் 16அடி 11அங்குலமும், கட்டுமுறிவு குளத்தின் நீர்மட்டம் 6அடியும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 5அங்குலத்திலும் நீர்மட்டம் உயர்வடைந்து மேலதிக நீர் வான் கதவு ஊடாக வெளியேற்றப்படுகின்றது. 

வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 6அங்குலம், புணானை அணைக்கட்டு 4அடி 7அங்குலம், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 16அடி 2அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 2அங்குலம் அளவில் உயர்ந்துள்ளன.

அவற்றின் 2 வான்கதவுகள் 2.5 அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று (16) காலை 6 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைப் பகுதியில் 41 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 85.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 69.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 35 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 33 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 46 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்  பதிவாகியுள்ளன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்வான பிரதேசங்களில் மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்கள் குடியிருப்புக்களிலும், வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதாகவும், இதனால் பல தொற்று நோய்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் மக்கள் அங்கலாய்கின்றனர்.