தேர்தல் வருடத்தில் மதுபான அனுமதிக்கு பத்திரங்களை கொடுத்து உறுப்பினர்களை வாங்க முயற்சி - சஜித் பிரேமதாச

தேர்தல் வருடத்தில் மதுபான அனுமதிக்கு பத்திரங்களை கொடுத்து உறுப்பினர்களை வாங்க முயற்சி - சஜித் பிரேமதாச

பாடசாலையின் மூலம் கல்வி மட்டும் அல்ல, நீதியையும், சட்டத்தையும் மதிக்கும் குடிமக்களை உருவாக்க வேண்டும். 

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்விச் சீர்திருத்தத்தில் இந்த உன்னத பண்புகள் போதிக்கப்படும். 

புகைபிடித்தல் மற்றும் மதுபானம் ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதை வலுவாக கற்பிப்போம். 

வைத்தியசாலைகளில் கூட மதுபானம், போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை படங்களின் மூலம் காண்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

2024 தேர்தல் ஆண்டு என்பதால் மதுபான அனுமதிப் பத்திர சூதாட்டமொன்று அரங்கேறி வருகிறது. 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளாகவும், சிறப்புரிமைகளாகவும் இந்த மதுபான, பியர் அனுமதிப் பத்திரங்களை வழங்கி ஜனாதிபதி, பிரதமர் பதவிகளைப் பெறுவதற்கு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

இதற்கு இடமளிக்கக் கூடாது. 

வங்குரோத்தான நாட்டில் பியர் அனுமதிப் பத்திரம், மதுபான கடைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்குவதை வன்மையாக எதிர்க்கிறோம். 

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இவை இரத்துச் செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு கம்பஹா, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் குறைமாத குழந்தைப் பிரிவுக்கு ரூபாய். 2,478,000 பெறுமதியான Bubble CPAP machine ஒன்றினை நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (13) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தனது அணியில் இத்தகைய சலுகைகளுக்கு, சிறப்புரிமைகளுக்கு தமது கட்சியையோ அல்லது கொள்கைகளையோ காட்டிக்கொடுக்கும் நபர்கள் இல்லை. 

இந்த சூதாட்டம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Man Power (மனித வலு) ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டின் Man Power நிறுவனங்களின் வேலையில் ஈடுபடும் ஊழியர்கள் குறைந்த ஊதியத்தையே பெற்று வருகின்றனர். 

இது போன்ற அடிமைத்தன வேலைகளுக்கு இடமளிக்கக் கூடாது. 

சகலரும் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்பதாலேயே இந்த சட்டங்கள் மாற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கு புதிய வியாக்கியாணம் கொடுக்க வேண்டும்.

நாட்டு குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் குறித்த புரிதல் இருக்க வேண்டும். 

இங்கு அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால், உயர் நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெறலாம். 

இந்த அடிப்படை உரிமைகளில், சுகாதாரம், கல்வி, பொருளாதார உரிமைகள் உள்ளடக்கப்படவில்லை. 

இவை அத்தியாயம் 6 இன் கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன. 

நீதிமன்றத்தின் மூலம் இவற்றுக்கு சவால் விடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டின் அடிப்படை உரிமைகளாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளே குறிப்பிடப்படுகின்றன. 

என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொருளாதார, சமூக, கலாச்சார, மத, சுகாதார மற்றும் கல்வி உரிமைகளும் இந்த அடிப்படை உரிமைகளில் அத்தியாயத்தில் உள்ளடக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திருடர்களுடன் காலம் கடத்துவதை விட வீட்டில் இருப்பதே மேல்.

இன்றும் கூட நாட்டில் ஊழல் மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 

இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திருடர்களுடன் சேர்ந்து பிழைப்பு நடத்த பிடிக்காததால் அவர்களுடன் இணைந்து கொண்டு பதவிகளை ஏற்கவில்லை. 

திருடர்களுடன் சேர்ந்து காலம் கடத்துவதை விட வீட்டில் இருப்பதே மேல் என்பதே எனது கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

சகல கொடுக்கல் வாங்கல்களின் போதும் வெளிப்படத்தன்மை இருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் சகல நிதிப் பரிமாற்றமும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். 

எந்தவொரு குடிமகனும் அறியக்கூடிய வகையிலான வெளிப்படைத்தன்மையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரும். 

இதனால் ஒழிந்து கொண்டு நிதி மோசடி செய்யவோ, திருடன் முடியாத நிலை ஏற்படும். 

அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.