முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் நால்வர் விளக்கமறியலில்!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவியுமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை (13) மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நால்வரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளார்.
குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்கள் மூவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்தாக தெரிய வருகின்றது.
சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22),
சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40),
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43)
ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிசாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவு கூறும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்து.
சம்பூர் பொலிசாரினால் நீதிமன்ற தடை உத்தரவு காண்பிக்கப்பட்டு குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கூறப்பட்டிருந்த நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும், இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.