ஊழல் மோசடி தொழிற்சங்கவாதிகள் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தது ஏன்?
பனை அபிவிருத்தி சபையின் கடந்த கால ஊழல் மற்றும் மோசடிகளில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பனை அபிவிருத்தி சபையின் தொழிற்சங்க உறுப்பினர்களான என்.நவநந்தன், பீ.ரஜீபரன், கே.கோபாலகிருஸ்ணன் மற்றும் ஜனாதரன் உள்ளிட்டவர்களே டக்ளஸ் தேவானந்தாவுடன் ரகசிய சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குறித்த தொழிற்சங்கத்தினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கே ஆதரவு வழங்கியிருந்னர்.
இந்த சந்திப்பின் போது, தற்போது பனை அபிவிருத்தி சபையின் நிர்வாகம் தொடர்பான குறை நிறைகளைப் பற்றி பேசியுள்ளதுடன், புதிய தலைவரை பதவி நீக்கும் நோக்கிலும் வலியுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தொழிற்சங்க உறுப்பினர்கள் கடந்த 2015 - 2019 வரையான காலப்பகுதியில் சபையின் வீழ்ச்சிக்கும் பெரும் பங்கு வகித்தவர்கள் என்பதுடன் பலவித நிதி மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பீ.ரஜீபரன் என்பவர் 2015 - 2019 காலப்பகுதியில் பழுதுகளுடன் கூடிய பனங்கருப்பட்டி தயாரிப்பு இயந்திரங்களை இறக்குமதி செய்ததன் ஊடாக நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் வரை நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஜனாதரன் பனை கன்றுகளை நாட்டுவதாக கூறி போலியாக பனங்காய்களை நாட்டி நிதிமோசடி மேற்கொண்டுள்ளார்.
இதுதவிர ஜனாதரன் அண்மையில் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.