ரயில் சேவையை இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு வலியுறுத்தல்!
ரயில் சேவையை இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் நேற்றும் இன்றும் ரயில் இயந்திர சாரதிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதால் அதிக நெரிசல் மிக்க ரயில்களில் இருந்து தவறி வீழ்ந்து பொறியியல் மாணவர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
இருப்பினும் ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கின்றது.
5 ஆண்டுகளாக தாமதமடைந்துள்ள தரமுயர்வை விரைவுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகயை முன்வைத்து ரயில் இயந்திர சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என லொகோமோடிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சீ.எம்.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று காலை பல அலுவலக ரயில் சேவைகளில் கடுமையான நெரிசல் நிலவியது.
இந்த பின்னணியில் கண்டியிலிருந்து பயணித்த ரயிலின் கூரையின் மீது அமர்ந்து சென்ற மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயின்றுவந்த மாணவர் ஒருவர் ராகமை – ஹொரப்பே ரயில் நிலையத்தின் கூரையில் மோதி கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.
அத்துடன் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த ஒருவரும் உயிரிழந்தார்.
தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானியை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரயில் இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று பிற்பகல் கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து 22 ரயில்கள் சேவையில் ஈடுபட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.
இதன்படி, களனி ரயில் மார்க்கத்தில் 4 ரயில்களும், பிரதான மார்க்கத்தில் 12 ரயில்களும், புத்தளம் மார்க்கத்தில் 6 ரயில்களும் இன்று பிற்பகல் சேவையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சகல இரவு அஞ்சல் ரயில்களும் இன்றிரவு சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று மதியம் வரையில் 119க்கும் அதிகமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்ததாக ரயில் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.