முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
அவர் தனது சட்டத்தரணிகளுடன் இணைந்து கோட்டை நீதவான் நீதிமன்றில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தேடுதலுக்கு பயந்து தலைமறைவாகியதாக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு பதில் வழங்கவே டயானா கமகே நீதிமன்றில் முன்னிலையானார் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
முன்னைய செய்தி-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இருக்குமிடத்தை தேடி பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குடிவரவு சட்டத்தை மீறி போலி கடவுச்சீட்டை பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபரை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ள நிலையில், அவரை சந்தேக நபராக பெயரிடுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் டயானா கமகேவை சந்தேகநபராகப் பெயரிட்ட நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆட்கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்து, சந்தேகநபரை கைது செய்வதற்காக சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்ற போதும் அவர் அங்கு இல்லை எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையில் டயானா தங்கியிருக்கும் இடம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.