விஞ்ஞான வினாத்தாள்கள் இன்றைய பரீட்சைக்கு முன்னதாக கசிவு - விசாரணை ஆரம்பம்!

விஞ்ஞான வினாத்தாள்கள் இன்றைய பரீட்சைக்கு முன்னதாக கசிவு - விசாரணை ஆரம்பம்!

மேல் மாகாண பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வழங்கப்பட்ட விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மேல்மாகாண கல்வி செயலாளர் சிறிசோம லொக்குவிதான தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்தர மதிப்பீட்டுப் பரீட்சை தொடர்பில், இன்று தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான விஞ்ஞான வினாத்தாள் வழங்கப்படுவதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வினாத்தாள் பகிரப்பட்டது.

2023 ஆம் ஆண்டு தொடர்பாக நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் விவசாய வினாத்தாளின் இரண்டாம் பாகமும் சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து, வினாத்தாளை முழுமையாக ரத்து செய்து மீண்டும் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் அம்பாறை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக பரீட்சை நிலையமொன்றில் கடமையாற்றும் 52 வயதுடைய அலுவலக உதவியாளர் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மீண்டும் மேல்மாகாண இறுதி மதிப்பீட்டுப் பரீட்சை தொடர்பான வினாத்தாள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.