குஜராத் சட்டப்பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் - அச்சமளிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவிப்பு!
குஜராத் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல் போன்றவைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் பாலின மாணவர் மற்றும் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரித்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையைப் படிக்கவே அச்சமாக இருப்பதாக குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் தெரிவித்துள்ளார்.
தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மூன்றாம் பாலின மாணவரை சக மாணவர்கள் துன்புறுத்தியதாகவும், மாணவி ஒருவரை சக மாணவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
இந்த செய்தியை தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்ஷா தேவாணி தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை நீதிமன்றம் நியமித்தது.
அந்த குழு தனது விசாரணை அறிக்கையை குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், அனிருதா பி மாயி அமர்வின் முன் 'சீல்' வைக்கப்பட்ட கவரில் கடந்த வாரம் சமர்ப்பித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த அறிக்கையை படித்த தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் அமர்வு, குஜராத் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல், பாகுபாடு, ஓரினச்சேர்க்கை, பேச்சு சுதந்திரம் மறுப்பு போன்றவை எல்லாம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.