புத்தாண்டினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

புத்தாண்டினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் தமிழ்-சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு பொது மக்களின் நலனுக்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் உளவுத்துறை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு பகுதியில் பாதுகாப்புக்காக போக்குவரத்து அதிகாரிகள் உட்பட சுமார் 6,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனைகளின் போது 36 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தை மீறி, நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் செயல்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே இந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புத்தாண்டு காலத்தில் ஏற்படும் தீ விபத்து சம்பவங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

குறிப்பாக புத்தாண்டு காலத்தில் சிறுவர்கள் பட்டாசு விபத்துக்களுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சிறுவர் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனுஷா தென்னேகும்புர குறிப்பிட்டுள்ளார்.