சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுத்துள்ளது - மாலைதீவுடன் இந்தியா முரண்பாடு!

இலங்கையின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முயன்ற சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

சீன கப்பலுக்கு  இலங்கை அனுமதி மறுத்துள்ளது - மாலைதீவுடன் இந்தியா முரண்பாடு!

பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்

முன்னதாக சீன அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang hong 3, இலங்கை மற்றும் மாலைத்தீவு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆய்வுக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை மற்றும் மாலைதீவுகளிடம் இருந்து சீனா முறைப்படி கோரியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இருப்பினும், ஹிந்துஸ்தான் டைம்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, கப்பலின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்தது

விஞ்ஞான ஆய்வு என்ற போர்வையில் உளவுத்துறை தரவுகளை சேகரிக்கும் நோக்கில் இந்த ஆராய்ச்சி பணியை சீனா பயன்படுத்துவதாக இந்திய ஊடகங்கள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டின.

அதேநேரம் மாலைத்தீவில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி, சீனாவின் சார்புடையவர் என்ற வகையில், அவர் இந்த கப்பலுக்கு அனுமதியை வழங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

ஏற்கனவே அவர் மாலைத்தீவில் நிலைக்கொண்டுள்ள இந்திய படையினரை விலகிச்செல்லுமாறும் கோரியிருந்த நிலையில் சீனக்கப்பலுக்கு அனுமதி வழங்கினால், அது இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.