“சிறிமாவின் இன்னொரு மகன்தான் குமார் பொன்னம்பலம்” - கஜேந்திரகுமாரை சவாலுக்கு அழைத்த டக்ளஸ்! 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டனர்.   இருவருக்கும் இடையிலான தர்க்கத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கருத்துக்களில் சில.....

“சிறிமாவின் இன்னொரு மகன்தான் குமார் பொன்னம்பலம்” - கஜேந்திரகுமாரை சவாலுக்கு அழைத்த டக்ளஸ்! 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டனர்.  

இருவருக்கும் இடையிலான தர்க்கத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கருத்துக்களில் சில.....

01. நீங்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாகவே வைத்துக்கொண்டு, தமிழ் மக்களை உசுப்பேற்றி அதில் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றீர்கள்.
 
02. உங்கள் தாத்தா (ஜி. ஜி. பொன்னம்பலம்) டி. எஸ் சேனாநாயக்க காலத்திலும்,  டட்லி சேனாநாயக்க ஆட்சியிலும் பங்கெடுத்தவர்.

அவர் மீன்பிடி மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்தவர். அப்போது அவர் ஏன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை. 

அந்த அமைச்சுப்பதவியை தக்க வைப்பதற்காக அப்போது குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு ஆதரவாக வாக்களித்து மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையை ரத்துச்செய்த வரலாற்றுத் துரோகத்தைச் செய்தார்.  

இதுபோல் பல துரோகச் செயல்கள் இன்னும் இருக்கின்றன. 

03. சிறிமா அம்மையாரின் காலத்தில் அவரைத் தொழுது வாழ்ந்த உங்கள் தகப்பன் (குமார் பொன்னம்பலம்) சிறிமாவின் இன்னொரு மகன் என்று அறியப்படுவதில் ஆனந்தம் கொண்டவர். 

அதாவது சிறிமாவின் மகனான அனுரபண்டார நாயக்காவை  (சுது புத்தா) வெள்ளை மகன் என்றும், உங்கள் தகப்பனை (குமார் பொன்னம்பலம்) கறுப்பு மகன் (களு புத்தா) என்றும் கூறப்பட்டதால் புகழடைந்தவர்.

04. 1983ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரங்கள் தலை தூக்கி இருந்த பின்னணியில் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தன பிரிவினைக்கு எதிரான சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்தார்.  

அதாவது சத்தியப்பிரமாணம் செய்து தொழில் செய்வோர் மீண்டும் புதிய சட்ட திருத்தத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும் என்று கூறியபோது அதை ஏற்காது அப்பாப்பிள்ளை அமிர்தலிக்கம் போன்றோர் இந்தியாவுக்கு சென்றுவிட்டனர்.  

உங்கள் தந்தை குமார் பொன்னம்பலம் மலேசியாவுக்குச் சென்று அங்கே இருந்த இலங்கை தூதுவர் முன்னிலையில் அந்த சட்ட திருத்தத்திற்கு விசுவாசமாக சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு எதுவும் நடக்காதது போல் நாடு திரும்பி தனது சட்டத்தரணி தொழிலைச் செயதவர்.
 
05. உங்கள் தந்தை  பல தேர்தல்களில் போட்டியிட்ட போதும் அவரால் வெற்றிபெற முடியாமல் போனது. இறுதியாக ஜனாதிபதி தேர்தலொன்றில் தமிழ் வேட்பாளராக போட்டியிட ஆயத்தமானார். 

அதையும் "புலிகளின் தலைவர் விரும்பவில்லையாம்" என்று பிரான்ஸில் இருந்து யாரோ கூறினார்கள் என்று பத்திரிகைக்கு அறிக்கை விட்டு விட்டு ஒதுங்கினார்.  அதன் பின்னர், அதுவரை புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவந்தவர். 

பிறகு தேர்தலில் வெல்வதற்கான ஒரு தந்திரோபாயமாக புலிகளை ஆதரிப்பவர் போல் காட்டிக்கொண்டார். தேர்தல்களில் வெல்வதற்காக புலி ஆதரவு காட்டுவதும், பேசுவதும்தான் உங்கள் அரசியல் அடிப்படை.   ஏன் என்றால் உங்கள் தாத்தாவும் மன்னாரில் போட்டியிட்டு தோற்றுப்போனார்.  

அவரது கொள்கை தோற்றதால் பிறகு "தமிழ்த் தேசியம்"எனும் உசுப்பேற்றும் கொள்கையுடன் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார்.  அதுபோல் உங்கள் தந்தைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி 1977ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தொகுதியை வழங்கியபோது அதை மறுத்து யாழ்ப்பாண தொகுதியை தனக்கு தருமாறு அடம்பிடித்தார்.  

அது கிடைக்காத பட்சத்தில் தனித்து போட்டியிட்டு தோற்றுப்போனார். இவ்வாறு தொடர்ச்சியாக தோல்வி கண்டதன் பின்னர் புலிக்குதிரையில் சவாரி செய்ய முற்பட்டு அவரும் அடிபட்டுப்போனார். 

06. உங்கள் தந்தையை சுட்டுக் கொன்றது யார் என்பது உங்களுக்குத்  தெரியும். அவரது கொலைக்கு நீதி கேட்டு நீங்கள் ஏன் நீதிமன்றத்திற்கு போகவில்லை. ஒருவேளை நீதிமன்றத்திற்குச் சென்று உண்மை வெளிப்படுத்தப்பட்டால் உங்கள் அரசியல் அடிபட்டுப் போகும்.

நீங்கள் துரோகியின் மகன் என்று தூற்றப்படுவீர்கள் என்பதும்  உங்களுக்குத் தெரியும்.  உங்கள் தந்தைக்கு நீதி கேட்க இலங்கை நீதி மன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிவருகின்றீர்கள். 

ஆனால் நீங்களும் உங்கள் சகாக்களும் இதே இலங்கை சட்டங்களிலும், நீதிமன்றங்களிலும்  நம்பிக்கை வைத்து வேறு வழக்குகளில் ஆஜராகி தொழில் செய்து வருகின்றீர்கள். 

07. நாட்டில் நல்ல வக்கீல்களும் இருக்கின்றார்கள்.  நீங்களோ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த வக்கீல் பெருமான் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். 

08. நீங்களும் , உங்கள் சகாக்களும் மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் மயிலந்தனைக்குப் போனதும், திருகோணமலைக்கு ஊர்வலம் போனதும், தையிட்டி, குறுந்தூர் மலைக்கு போவதும் அங்கு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அல்லவே. அந்தப் பிரச்சினைகளையும் தீராப் பிரச்சினைகளாக்கி அதிலும் அரசியல் சுயலாபம் தேடுவதற்காகத்தானே.

அதிலும் மக்களை உசுப்பேற்றி ருசி கண்ட உங்கள் கைப்பிள்ளை திருகோணமலை ஊடக வாகன ஊர்வலம் போனவர். அங்கு வழிமறித்து சிலர் தாக்க முற்பட்ட போது அவர் குனிந்து கொண்டு ஓடினார். அந்தத்  தாக்குதல் சம்பவத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஆனால் உங்கள் கைப்பிள்ளை அதை எதிர்த்து நின்றிருக்க வேண்டும். கோழைபோல் ஓடியிருக்கக் கூடாது.  என்னை வெலிக்கடைச் சிறையில் சிங்களக் காடையர்களும், களுத்துறைச் சிறையில் தமிழ்க் காடையர்களும் தாக்கியபோது நான் புறமுதுகு காட்டி ஓடவில்லை. அதை எதிர்த்தும், எதிர்கொண்டும் இன்று உயிருடன் இருக்கின்றேன். 

09. 1998ஆம் ஆண்டு களுத்துறைச் சிறையில் இருந்த தமிழ் சிறைக் கைதிகள் தம்மை விடுவிக்க உதவுமாறு அழைப்பை விடுத்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று பார்வையிடச் சென்றபோது அவர்களில் சிலர் என்னை கொலை செய்யும் நோக்கோடு தாக்கினார்கள். 

அந்த தாக்குதலை எதிர்கொண்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியிருந்த என்னை சக அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில் சுகவீனம் பார்க்க உங்கள் தந்தை வந்திருந்தார். 

அவருடன் நீங்களும் வந்திருந்தீர்கள். அப்போது உங்கள் தந்தை என்னிடம் நட்போடு கடிந்துகொண்டார்.  " ஐசே அவங்களைப்பற்றித் தெரியும்தானே .. அவங்கள் கொலைகாரர் என்று தெரியுந்தானே. அதாலதான் நான் கூட அவர்களை பார்க்கப்போகவில்லை என்று கூறினார். 

அது மட்டுமல்ல என்னைத் தாக்கிவர்களுக்காக வழக்காட உங்கள் தந்தையை அவர்கள் கேட்டதாகவும் அதை அவர் மறுத்ததாகவும் , மனித நேயத்தோடு உங்களை பார்க்க வந்தவரைத்தாக்கி மனிதாபிமானத்திற்கு  இழுக்கை ஏற்படுத்திவிட்டீர்கள். உங்களுக்காக வழக்காட விரும்பவில்லை என்று கூறியதாகவும் கூறினார். 

அதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். ஆனால் மறந்ததுபோல் நடிப்பீர்கள். 
 
10. 13ஆவது திருத்தச் சட்டத்தை ஈ.பி.டி.பி ஒருபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுத் தீர்வாகக் கூறவில்லை. அதை ஒரு ஆரம்பமாகக் கொண்டு கட்டங்கட்டமாக இலக்கு நோக்கி முன்னேற முடியும் என்றே கூறி வருகின்றோம். 

அதை மறுக்கும் கஜேந்திரகுமார் அவர்களே உங்கள் கட்சியின் நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டமென்ன?  அதை அடையும் வேலைத்திட்டம் என்ன? அன்று உங்கள் தாத்தா தமிழரசுக் கட்சி கூறிய பிரிவினைவாதத்தை எள்ளிநகையாடினார் அவர் மறுத்ததைத்தான் இன்று நீங்கள் ஆதரிக்கின்றீர்கள்.

உதாரணமாக அன்று தமிழரசுக் கட்சியினர் "வடக்கு கிழக்கு தனிநாடு" என்றார்கள். அதை மறுத்த உங்கள் தாத்தா அவ்வாறெனின் "ஆணையிறவைச் சுற்றி முல்லு வேலி அடிக்கப்போறியளோ" என்றார். இப்போது நீங்கள் தனிநாடு பற்றி பேசுகின்றீர்கள். 

11. நான் நீண்டகாலம் அமைச்சராக அரசுகளில் பங்கெடுத்தும் வருவதால் 13ஆம் திருத்தச் சட்டத்தை தனி மனிதனாக கையில் எடுத்து பையில் போட்டுக் கொண்டு செயற்பட முடியாது. ஒருவேளை உங்கள் தாத்தா மீன்பிடி  மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்த போது பல வாய்ப்புகளைச் சுருட்டி தனது பையில் போட்டுக்கொண்டதைப் போன்று யோசிக்கின்றீர்களோ தெரியவில்லை. 
 
12. இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய படகுகளின் அத்துமீறலை கடற்றொழில் அமைச்சராக இருந்தும் தீர்க்கவில்லையே என்று கேட்கின்றீர்கள். நான் நடைமுறைச் சாத்தியமாக  பிரச்சினைகளை தீர்க்க திட்டங்களை முன்வைத்த போது அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே.  

உங்கள் தாத்தா அமைச்சராகவும் , அக்கால அரசுகளின் செல்லப்பிள்ளையாகவும் இருந்தபோது தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினையைத் தீர்த்தார் என்பது ஒரு பக்கமாக இருக்கட்டும். இந்தியப் படகுப் பிரச்சினையைத் தீர்க்க நான் பல தருணங்களில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றேன். இப்போதும் பல முயற்சிகளை எடுக்கின்றேன். 

ஒன்று இராஜதந்திர ரீதியான முயற்சிகள் அதாவது பேச்சுவார்த்தைகள். இரண்டாவதாக சட்ட ரீதியான முயற்சிகள் அதாவது கைதுகள் மூன்றாவது முயற்சியாக வடமாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக தமிழ்நாட்டுக்கும், பாண்டிச்சேரிக்கும்  சென்று அங்குள்ள அரசியல்வாதிகளையும், கட்சித் தலைவர்களையும் சந்தித்து இழுவை மடித் தொழிலால் கடல் வளங்கள் அழிவதையும், தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுவதையும் எடுத்துக் கூறுவதனூடாகவும் இந்த அத்துமீறலுக்கு தீர்வைக்கான முயற்சிக்கலாம் என்று நாடாளுமன்றத்திலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களிலும் நான் கூறி வருகின்றேன். அதற்கும் நீங்கள்  இணங்குவதில்லை.

ஏன் என்றால் அவ்வாறு சென்று பேச்சுக்கள் நடத்தினால், ஒருவேளை தீர்வுகள் கிடைக்கும் சாத்தியம் ஏற்பட்டால், அது நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வல்லவே. உங்களின் நோக்கமோ அது தீராப் பிரச்சினையாக தொடர வேண்டும் என்பதுதானே.
 
13. கொழும்பில் நடந்த மகிந்த ராஜபக்சவின் கட்சிக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டது தொடர்பாக கூறுகின்றீர்கள். எனது அரசியல் கொள்கை பற்றி  மிகத் தெளிவாக கூறிவருகின்றேன். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று அதற்கான  வேலைத்திட்டம் எம்மிடம் உண்டு. 

அதாவது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடக தேசிய நல்லிணக்க வழிமுறையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதாகும். 

அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டது எனது தேசிய நலலிணக்கச் செயற்பாட்டின் ஒரு அம்சமாகும். அதுபோல் நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது கட்சிக் கூட்டத்திற்கு ஒரு கட்சித் தலைவராக அழைத்தால் அதையும் மதித்துச் செல்வேன். 

14. இறுதியாக ஒருவிடயத்தைக் கூறுகிறேன். எழுந்தமான உங்கள் பொய்களையும், வேலைத்திட்டம் அற்ற உங்கள் அரசியலையும் பற்றி ஒரு பொது மேடையில் பகிரங்கமாக விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன். உங்களால் முடியுமாக இருந்தால் பொது மேடைக்கு வாருங்கள். 

என்று பல விடயங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். இதனால் குறித்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் தடுமாறிப்போன கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  நிகழ்ச்சித் தொகுப்பாளரையும் பேசவிடாது, அமைச்சரையும் பேசவிடாது, அமைச்சர் மீது அவரது வழமையான வாய்ப்பாடுகளான அவதூறுகளை இடைவிடாது உச்சரித்துக்கொண்டே நிகழ்ச்சியை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியேறி உளறிக்கொண்டே வாகனத்தில் ஏறிச்சென்றார்.