சாய்ந்தமருது பிரதேசத்தில் திடீர் சோதனை - பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு !
புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் இன்று (01) மூன்றாவது தடவையாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.
கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.அஸ்லம் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும், வெயிலில் வைக்கப்பட்ட மற்றும் வடிகான்கள் மீது வைக்கப்பட்ட உணவுகள் கைப்பற்றப்பட்டது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.