பாலியல் சித்திரவதை செய்த ஆசிரியர் - மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி
கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்றுவந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாணவியின் தற்கொலைக்கு பின்னால் உள்ள விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
மாணவி கல்விக் கற்றுவந்த பாடசாலையில் கற்பித்த கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளார். இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த ஆசிரியரை பாதுகாத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மாணவிக்கு மன அழுத்தம் மற்றும் அவமானம் ஏற்பட்ட நிலையில் மாணவி விரக்தியடைந்த நிலையில் இருந்துள்ளார். பாடசாலை நிர்வாகம் குறித்த ஆசிரியருக்கு துணை நின்றதால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்றும் விடுதலையாகியும் வந்துள்ளார்.
மாணவியை பெற்றோர் கொழும்பில் உள்ள வேறு ஒரு பிரபல மகளிர் பாடசாலைக்கு மாற்றியுள்ளனர். இந்த நிலையில் மாணவி பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் கற்கை நிலையத்தில் ஆசிரியராக இருந்தவர் மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியரின் நண்பராகும்.
தனது நண்பருக்கு மாணவி குறித்து தவறாக கூறியுள்ள விடுதலையாகி குறித்த ஆசிரியர், மாணவி குறித்து பொய்யான தகவல்களையும் தெரிவித்துள்ளார். குறித்த ஆசிரிய நண்பர் மாணவி தொடர்பில் ஏனைய மாணவர்களிடம் தவறாக கூறியுள்ளார். இதனால் மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் குறித்த மாணவி தாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். இதற்கு முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகவே ஏற்க வேண்டும் என பெற்நோர் கூறுகின்றனர்.
மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோருகின்றனர்.
உடனடியாக பொலிஸார் மாணவியின் தற்கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோருகின்றனர்.