நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தாம் எதிர்கொண்ட தொடர் தோல்விகளுக்காக, நாட்டிலுள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோரியுள்ளது.

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, அணித்தலைவர் குசல் மெண்டிஸ் அணி சார்பில் நாட்டு மக்களிடம் மன்னிப்பை கோரியிருந்தார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன, அணியில் உள்ள ஒழுக்கம் மற்றும் விளையாட்டு தொடர்பான பலவீனங்களை சீர்செய்யும் வரை இலங்கை கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தெரிவித்தார்.

வீரர்களிடம் இருந்த பலவீனமே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்திய அணியுடனான போட்டியிலோ வேறு எந்த அணியுடனான போட்டியிலோ வேண்டுமென்றே தோல்வியடைய வேண்டுமென எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் அணி இந்த முறை உலகக்கிண்ணத் தொடரில் அதிகளவான தோல்விகளை எதிர்கொண்டது.

குறித்த தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் 9 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.

அதன் மூலம் முதன்முறையாக சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.

இந்த தொடரில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமது பயிற்றுவிப்பாளர்களுடன் நாடு திரும்பியது.

இதன்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, இலங்கை அணியின் தோல்விகளுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவற்றை வெளிப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை கிரிக்கெட் அணியினர், இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமது தோல்விகளுக்கான காரணங்களை விளக்கினர்.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன, ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ், அணி முகாமையாளர் மஹிந்த ஹலங்கொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், தோல்விகளுக்கு பின்னால் உள்ள சதிகளை வெளிப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.