கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் தேசிய தௌஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள்

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் தேசிய தௌஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள்

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களாக கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் குறித்து விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்கள் தலைமையிலான குழுவை பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த நான்கு இலங்கையர்களும் கடந்த 20ஆம் திகதி இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவராக உள்ள அபுவுடன் தொடர்புப்பட்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் தேசிய தௌஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக இந்தியாவின் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் குழுவை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களில், நீதிபதி சரத் அம்பேபிட்டிய படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொட்ட நௌபர் என அழைக்கப்படும் நியாஸ் நௌபர் என்பவரின் மகனும் அடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.