வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தீச்சட்டி ஏந்தி போராட்டம் - வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தத்தை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது திருகோணமலயைச் சேர்ந்த  றஜீவன் என்பவர் பொலுஸாரால் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு பின் விடுதலை  செய்யப்பட்டார்.

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பில் இருந்து சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் சென்ற பேரூந்தை வெருகல் பகுதியில் உள்ள பொலிஸார் தடுத்து நிறுத்தி திருகோணமலைக்கு செல்ல முடியாது என தெரிவித்து சென்றவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் உறவினர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இறுதியில் அப்பகுதியில் இருந்து திருகோணமலை செல்வதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  மாபெரும் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு கிழக்கு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான இன்றையதினம் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் சங்கம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும் அதே போன்று கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையிலும் இப் போராட்டத்தை நடாத்துகின்றனர்.

இதற்கமைய வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த மாபெரும் போராட்டத்தை யாழில் முன்னெடுத்துள்ளனர்.

யாழ் ஆரியகுளம் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்ட பேரணி யாழ் நகரைச் சுற்றி வந்து நிறைவடைந்துள்ளது.