ரணிலுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியிலேயே தேர்தலில் போட்டியிடுவோம்-சஜித் பிரேமதாச!
ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களுடன் கலந்துரையாடல் இல்லை. எண்ணிக்கை கணக்குப்படி மட்டும் பார்த்தால் தானும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆழமான அரசியல் ஆய்வுக்குச் சென்று பார்த்தால் அது உண்மையல்ல என்பதை காட்டுகிறது. நாட்டு மக்கள் வழங்கிய மக்கள் ஆணையை, மக்களின் ஆசிர்வாதங்களை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குத் தயார். பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடுவோம். கொள்கை ரீதியாக உடன்பாடு காண்பவர்களுடன், முற்போக்கு மற்றும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நபர்களுடன் கைகோர்ப்போம். இவை அரசியல் டீல்கள் அல்ல. கொள்கைகளை பின்பற்றி, கொள்கைகளை ஏற்று, அவற்றினூடாக முன்னோக்கி செல்ல விரும்புபவர்களுக்கு இது தடையல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அதேபோன்று ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறுகிறார். அவர் இல்லாமல் அவரது அணிக்கு இடமில்லை. நமது நாடு மிகவும் இக்கட்டான கட்டத்தில் உள்ளது. ஆனால் தேர்தல் செயல்முறை ஜனநாயக ரீதியான செயல்முறையாக அமைந்து காணப்படுகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாத்து தூய்மையான அரசாங்கத்தையும், தூய்மையான கொள்கையுடைய மக்கள் சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு எந்த நேரத்திலும் முற்போக்கான பிரேரணைகளுக்கு ஆதரவளிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் பிரதமர் வேட்பாளராக பொதுத் தேர்தலை நடாத்தும் பொறுப்பை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு இன்று கொழும்பில் கூடிய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக தீர்மானித்தர். இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு தவறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் தனது தலைமையில் தேர்தலை முன்னெடுக்க முன்வந்தனர். சமீபகாலமாக பல்வேறு தரப்பினரும் பொய்களை பரப்பி வருகின்றனர். எனவே, ஊடகங்கள் சொல்வதையும், வெளிப்படுத்துவதையும் ஒருசேர ஏற்காமல், புத்திசாலித்தனமாக சிந்தித்து ஆராய்ந்தறியுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
அறைகளுக்குள் இருந்து கொண்டு இரகசிய முடிவுகளை எடுக்கும் முறையை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. கட்சி ஜனநாயகத்தை பாதுகாப்போன். அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்து நாட்டுக்கு மதிப்புச் சேர்ப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் கேலி நகைச்சுவைகளால் மனதளவில் உடைந்து போகமாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-