கம்பளையில் முச்சக்கரவண்டி கடத்தல் சம்பவம்!

கம்பளையில் முச்சக்கரவண்டி கடத்தல் சம்பவம்!

கம்பளை நகரில் இருந்து  அம்புலாவ பகுதிக்கு செல்ல வேண்டும் என்று  இரண்டு பேர்   முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சென்ற நிலையில் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது அம்புலாவ  கல்பங்கலாவ  என்ற பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியின்  மேலங்கியை எடுத்து சாரதியின் கழுத்தை நெறித்து அவரை அடித்து காட்டு பகுதியில் தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியை  கடத்தி கொண்டு சென்றுள்ளனர்.

அம்புலாவ பகுதியில் இருந்து  எம்மாத்தகம பகுதியை நோக்கி கடத்திச் செல்லப்பட்ட குறித்த முச்சக்கரவண்டி  எம்மாத்தகம பகுதியில் இருந்து அம்புலாவ  பகுதிக்கு வந்த  கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனை தொடர்ந்து முச்சக்கரவண்டியை கடத்தி கொண்டு சென்ற  இரு சந்தேக  நபர்கள் அந்த பகுதியில் உள்ள காட்டுக்கு பாய்ந்து தலைமறைவாகியுள்ளனர்,

இதனை தொடர்ந்து அப் பிரதேச மக்கள் இரவு முழுவதும் தேடும் பணியில்  ஈடுப்பட்டு   இரு சந்தேக நபர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இரு சந்தேக நபர்கள்  23 மற்றும் 35 வயதுக்கு உட்பட்ட கம்பளை எத்கால்ல பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.