தமிழ்நாட்டை நோக்கி நகரும் வலுவான தாழமுக்கம்!

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள காற்று சுழற்சியானது,  அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்க பகுதியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பின்னர் அடுத்த வரும் இரு நாட்களில் மேற்கு அல்லது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, வட இலங்கைக்கு அண்மையாக வந்து, பின்னர் அதன் நகரும் திசையை மாற்றி தமிழ்நாட்டின் கரைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இன்று இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை எதிர்வு கூறலில்,

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில பகுதிகளில் அவ்வப்போதும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.  

சில பிரதேசங்களில் முக்கியமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100mm மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.