ஸ்ரீ தலதா வழிபாட்டின் ” இரண்டாம் நாள் இன்று

ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை வழிபடவரும் பக்தர்களுக்கான “ஸ்ரீ தலதா வழிபாட்டின் ” இரண்டாம் நாள் சிறப்புக் கண்காட்சி, இன்று (19) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த சிறப்புக் கண்காட்சி நண்பகல் 12 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
புனித தந்த தாதுவை வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருவதனால் பக்தர்களின் சனநெரிசலைக்குறைக்கும் வகையில், புனித தலதா மாளிகையில் இருந்து மூன்று புதிய பாதைகளினுாடாக வழிபாட்டை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி
• டி.எஸ். சேனநாயக்க வீதியிலிருந்து ஆலய நுழைவாயிலுக்கும்
• ரதுபோக்குவவிலிருந்து சங்கராஜ மாவத்தை வழியாகவும் ஆலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கும்
• ரதுபோக்குவவிலிருந்து ஆலய மைதானம் வழியாகவும் பிரதான நுழைவாயிலுக்கும் பக்தர்கள் வருகை தரமுடியும்.
இதேவேளை, கண்டியில் உள்ள புனித தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக இன்றும் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.