ஐ.தே.கவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில்; ஒக்டோபர் 21ல் அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் 57ஆவது சம்மேளனத்தில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதியும், கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஐ.தே.கவின் 57ஆவது சம்மேளனம் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.
கடந்த 4ஆம் திகதி கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 57ஆவது சம்மேளனத்தை பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டது
ஐக்கிய தேசியக் கட்சியின் 57ஆவது சம்மேளனத்தில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதியும், கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இந்த சம்மேளனத்தில் 24ஆயிரம் ஆதரவாளர்கள் கலந்துகொள்ள உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சம்மேளனத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 4ஆம் திகதி கூடிய கட்சியின் மத்திய செயற்குழுவிலேயே சம்மேளனத்தை பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கட்சியின் எதிர்கால செயல்பாடுகளை வழிநடத்தவும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார,
“ஒக்டோபர் 21ஆம் திகதி ஐ.தே.கவின் சம்மேளனம் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
சம்மேளனத்துக்கு முன்னதாக கட்சியின் தொகுதிக்குழுக் கூட்டங்களை நிறைவுசெய்யவுள்ளோம். கட்சிக்குள் 35 வயதுக்கும் குறைவான அதிக இளைஞர்களை இணைந்துக்கொள்ளும் முயற்சிகள் இடம்பெற்று வருவதுடன், அவர்களை தேர்தல்களில் போட்டியிடவும் அனுமதிக்க உள்ளோம்“ எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஐ.தே.கவின் 57ஆவது சம்மேளனத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு முக்கிய உறுப்பினர்கள் ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
சம்மேளனத்துக்கு முன்னதாக இந்த விடயம் குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலகட்ட கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அக்கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டார்.