காற்றின் வேகம் அபாயகரமானதாக இருக்கும் - இயற்கை அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காற்றானது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி வடக்கு வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 4 பேரும், மத்திய மாகாணத்தில் 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீரற்ற வானிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்திற்கு உட்பட்ட, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு, பாறை சரிவு மற்றும் தரை தாழிறக்கம் என்பன தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால், இன்று முற்பகல் வெளியிடப்பட்ட, இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலிய பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படும், முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கு தயார் நிலையில் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, செம்மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மலையகப்பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திம்புள்ள - பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட, கிறேக்கிலி பெருந்தோட்டப் பகுதியில்; வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், எந்தவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தவர்களை பாதுகாப்பான இடத்தில்; தங்க வைப்பதற்கும் அவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும்; நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலையால், அனர்த்தம் அபாயம் மிகுந்த பகுதியில் வசிக்கும் மக்கள், அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.