2058 இல் உலக சனத்தொகை 1000 கோடியாகும் என ஐ.நா தெரிவிப்பு!
2058 இல் உலக சனத்தொகை 1000 கோடியாகும் என்று ஐ.நா.அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று உலக சனத்தொகை தினம் ஆகும்.
உலக மக்கள் தொகையானது 700 கோடியிலிருந்து 800 கோடியாவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், 800 கோடியிலிருந்து 900 கோடியாவதற்கு 14 ஆண்டுகள் ஆகுமெனவும் அதாவது 2037 இல் உலக மக்கள் தொகை 900 கோடியெவைும் ஐ.நா. வின் அறிக்கையில் கணிப்பிடப்பட்டுள்ளது.
உலக சனத் தொகையில் இந்தியா (144 கோடி 17 லட்சம்) சீனா ( 143 கோடி ), ஐக்கிய அமெரிக்கா (34 கோடி 18 லட்சம்), உலக சனத்தொகைப் பட்டியலில் இலங்கை(2 கோடி 19 லட்சம்) ஆகும்.
உலக சனத்தொகை வளர்ச்சியானது வளர்ந்து வரும் நாடுகளில் மிக மிக வேகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலக சனத்தொகை வருடமொன்றுக்கு 80 மில்லியன் தொகையினால் அதிகரித்து வருகின்றது.
நாள் ஒன்றுக்கு பிறப்புக்களால் 2,18,900 சனத்தொகை அதிகரிக்கிறது.
பொதுவாக இறப்பு வீதத்தைவிட பிறப்பு வீதம் அதிகமாக காணப்படுவதே சனத்தொகைப் பெருக்கத்திற்கான காரணமாகும்.
நவீன காலத்தில் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம் பெருமளவுக்கு இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.
பதின்ம வயதிலே குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் ஆபிரிக்க நாட்டுப் பெண்கள் இன்று முன்னிலையில் இருப்பதனால் அங்கு வேகமாக சனத்தொகை அதிகரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன.
கி.பி. 01 இல் உலக சனத்தொகை சுமார் 2 கோடியாகவும் காணப்பட்டது.
இத்தொகை கி.பி. 1,000 ஆம் ஆண்டில் 27.5 கோடியாகவும் கி.பி. 1,500 ஆம் ஆண்டில் 45.5 கோடியாகவும் 1650 ஆம் ஆண்டில் 50 கோடியாகவும் 1750 ஆண்டில் 70 கோடியாகவும் 1804 ஆம் ஆண்டில் 100 கோடியாகவும் 1850 ஆம் ஆண்டில் 120 கோடியாகவும் 1900 ஆம் ஆண்டில் 160 கோடியாகவும் 1927 ஆம் ஆண்டில் 200 கோடியாகவும் 1950 இல் 255 கோடியாகவும் 1960 ஆம் ஆண்டில் 300 கோடியாகவும் 1975 இல் 400 கோடியாகவும் 1987 ஆம் ஆண்டு 500 கோடியாகவும் உயர்ந்தது.
1999 ஆம் ஆண்டில் 600 கோடியாகவும் 2012 ஆம் ஆண்டு 700 கோடியாகவும் காணப்பட்டது.
இன்று 812 கோடி 7 லட்சம் [8,120,708,753].
2037இல் 900 கோடி எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுவாக நோக்குமிடத்து 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தை தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக பல மடங்குகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.
காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகின்றது.
கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி நகர்கிறார்கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது.
குடிநீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை ஏற்படுகின்றன.
மக்கள் தொகைப் பெருக்கத்தின் பாதிப்பு அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தி அடையாத நாடுகளிலே அதிகமாக காணப்படுகின்றன.
காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை வெறும் 20 சதவீதம்தான்.
மாறாக, 20 சதவீத வளத்தைக் கொண்டிருக்கும் அபிவிருத்தி அடையாத நாடுகளான வறிய நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதமாகும்.
இன்று உலக சனத்தொகையில் சுமாராக அரைவாசி மக்கள் 25 வயதை அடையாதவர்களாக இருப்பதனால் குறுகிய காலத்தில் சனத்தொகையை கட்டுப்படுத்துவது என்பது மிகக் கடினமான விடயமாக இருக்கும் என்பது பல ஆய்வாளர்களினதும் கருத்தாக இருக்கின்றது.
இன்று உலகில் 925 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
வருடத்திற்கு 25 மில்லியன் குழந்தைகள் உலகில் பட்டினியால் இறக்கின்றன.
போஷாக்கின்மையால் 170 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகின்றன.
சனத்தொகை அதிகரிக்கும் நிலையில் பட்டினி இறப்புக்களும் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதும் குழந்தைகள் வளர்ச்சியில் பாதிப்புக்கள் ஏற்படுவதும் உலகில் பட்டினி அதிகரிப்பும் மேலும் மேலும் அதிகரித்துச் செல்லும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சனத்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாம் கருச்சிதைவு, கருவைக் கலைத்தல் போன்ற பாவகரமான செயல்களில் ஈடுபடுவது தவறு.
அறியப்பட்ட வளங்களை கணக்கில் எடுத்தால் உலக மக்கள் தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது.
எதிர்காலத்தில் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள், முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு புதிய வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under Population) கருதப்படும் நிலை தோன்றக்கூடும்.
உலகில் அறியப்படாத வளங்கள் அறியப்பட்ட வளங்களைப்போல பல மடங்குகளாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வளங்கள் கண்டறியப்பட்டால் மக்கள் தொகை பூமிக்கு ஒரு பொருட்டாக இருக்க மாட்டாது. மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்