இன்னமும் கருவறுக்கப்படும் ஒரு சமூகத்தின் கடைசி உரிமை தளமாக இருப்பது உள்ளூராட்சி!
மிக நீண்ட தாமதங்கள் எதிர்பார்ப்புகள் மத்தியில் உள்ளூராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேள்விக்குறியொன்று இருந்த நிலையில், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் சிந்தித்து தமிழ்மக்கள் வாக்களித்து இருக்கின்றார்கள். இந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்பு வென்ற நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றீர்கள் என்பதனை வைத்துத் தான் வரும் மாகாணசபைத் தேர்தலில் மக்கள் உங்களை கையாள்வார்கள்.
மிகவும் ஒடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டு, இன்னமும் கருவறுக்கப்படும் நிலையில் இருக்கின்ற சமூகத்தின் கடைசி உரிமைத் தளமாக இருப்பது இந்த உள்ளூராட்சி. உள்ளூர் சமூகங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அந்த சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அந்த சமூகங்கள் தமக்குள் எதிர்கொள்கின்ற சவால்கள் அவர்களால் வெற்றி கொள்ளப்பட வேண்டும். அதற்கேற்ற முறையில் அவர்கள் வலுவூட்டப்பட வேண்டும். சமூக நிறுவனங்கள் பலமாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு வட்டாரத்துக்குமென பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் போது அந்த வட்டாரத்துக்கென தலைமைத்துவம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதனை நாங்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டாரப் பிரதிநிதியையும் அதற்கு மேலதிகமாக நியமிக்கப்படும் பிரதிநிதியையும் நாங்கள் கவுரவிக்க வேண்டும். அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு முதன்மையான பாத்திரத்தை நாங்கள் வழங்க வேண்டும். எனத் தெரிவித்தார் சமூக பொருளாதார ஆய்வாளரான செல்வின் இரேணியஸ்.