"சதுரங்க மேடையில் நாம் சிறிய இனக் குழு - ஒருவராலும் எங்களுக்கு நன்மை இல்லை" - ஹெக்ரர்
"நாங்கள் சதுரங்க மேடையில் சிறிய சிறிய இனக் குழு. ஒருவராலும் எங்களுக்கு நன்மை இல்லை. " - ஹெக்ரர், இப்படி மனம் வெறுத்து போவது மனித இயல்பு.
கனடாவின் மத்திய அரசில் அமைச்சர் Gary Ananthasangari யும் அவரது துணைவியார் ஹரிணியும் மாணவர்களாக இருந்த போது என்னை அறிந்தவர்கள். எனக்கு மிகவும் உதவியவர்கள். இந்த முறை சந்திக்க முடியவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையில் பல முயற்சிகளை செய்தவர்கள்.
இனப்படுகொலையை முதன்முதலாக இலங்கைக்கு வெளியே ஒரு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ள வைத்த ஒன்ராறியோ அமைச்சர் விஜய் தணிகாசலத்தை அவர் கேட்டுக் கொண்டதன் படி கடந்த வாரம் நடந்த யாழ் பல்கலைக்கழக 50ம் ஆண்டு நிகழ்வில் இரண்டு முறை இருவர் மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தினர்.
தொலைபேசி இலக்கத்தை பெற்றுச் சென்றார்.
விஜய் இனப்படுகொலையை ஏற்றுக் கொள்ள வைத்த பின் கனேடிய மத்திய அரசும், வேறு சில நாடுகளும், அண்மையில் அமெரிக்க காங்கிரசும் இனப்படுகொலையை ஏற்றுக் கொண்டுள்ளன.
"எனது எண்ணம் இவங்களைக் கொழுவி விட வேண்டும். இதற்கு சீனாவுக்கான தமிழர்கள் ( இது சம்பந்தமாக உன்னுடன் கதைத்தேன்) என்ற ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி வட கிழக்கில் சீனாவின் முதலீட்டை ஏற்படுத்ல்.
சீன கலாச்சார மண்டபத்தை யாழில் கட்டுதல், சீன சார்பு நாடளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புதல், அமரிக்காவும் இந்தியாவும் துடிப்பான்." - ஹெக்ரரின் இந்த எண்ணம் நல்ல நோக்கத்தில் தோன்றியிருந்தாலும், சீனாவின் தேவையை அறிந்து தோன்றியதாக தெரியவில்லை.
சீன சார்பு அரசியல் இயக்கம் ஏற்கனவே இயங்குகிறது. சீன அரசு அந்த இயக்கத்துடன் சேர்ந்து அவர்களை பெற்றிபெற உழைக்கும்படி கேட்கும்.
அந்த இயக்கத்துக்கு தலைமை வகிப்பவர் சீனாவின் நம்பிக்கையை பெற்று அமெரிக்க குடியுரிமையை உதறித்தள்ளிய கோத்தபாய ராஜபக்ஷ. கோத்தபாய மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே சீனாவின் தேவை. நான் அதற்கு உதவ போவதில்லை.
எந்த ஒரு விடயத்தை திட்டமிடும் போதும் நான்கு முக்கிய அம்சங்களை தெளிவாக விளங்கிக் கொண்டு திட்டமிட வேண்டும்.
இதை SWOT ஆய்வு என்று அழைப்பார்கள் - SWOT - Strengths, Weaknesses, Opportunities and Threats.
Strengths - எம்மிடம் உள்ள பலங்கள். அன்று ஆயுதபலமும் சர்வதேச கட்டமைப்பும் விடுதலைப்புலிகளிடம் - ஈழத்தமிழரிடம் இருந்தது.
இன்று எம்மிடம் உள்ள பலம் பொருண்மியம், முதலிடும் வணிக பலம், சர்வதேச அரசளவில் அமைச்சரவை அளவில் கனடா, அமெரிக்கா, நோர்வே, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் செல்வாக்கு, சர்வதேச தரத்தில் விஞ்ஞான, பொறியியல், கணணியியல், மருத்துவம், முகாமைத்துவம், வங்கியியல், பங்குச்சந்தை நிபுணத்துவம் ஆகியவை எங்கள் பலம்.
சக்திவாய்ந்த சர்வதேச வலையமைப்பும் எங்கள் பலம். நிச்சயமாக நாங்கள் பலம் பொருந்தியவர்கள்.
Weaknesses - எம்மிடம் உள்ள பலவீனங்கள் - இவற்றுள் முதன்மையானது, தனியொரு தலைவரில் தங்கியிருந்து தோற்றுப்போன நம்பிக்கையிழந்த மனச்சோர்வு.
அடுத்த பலவீனம், சிங்கப்பூரின் லீ குவான் யூ போல அறிவுக்கும் ஆற்றலுக்கும் முதலிடம் கொடுக்காமல், உணர்ச்சிபூர்வமாக முடிவெடுத்து செயற்படுபவர்களின் தலைமையை விரும்புதல்.
நிச்சயமாக நாங்கள் எங்கள் மக்களை அவர்கள் மண்ணில் வாழவைக்க முடியும். எமது பலவீனங்களே எங்களை கீழே அழுத்தி வைத்துள்ளன.
Opportunities - எமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்கள். இன்று இலங்கை கடனில் மூழ்கி அழிந்து கொண்டு போகிறது. ராஜ் ராஜரட்ணம் - எமது மக்களில் ஆர்வமுள்ள உலகப்பெரும் செல்வந்தர் யாழ்ப்பாணத்திற்கு சென்று குடியேறி, முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை அடையாளம் கண்டு முதலிட்டு வருகிறார்.
இலங்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமது மக்களின் ஓய்வூதிய சேமிப்புகளை கோடானு கோடிக்கணக்கில் கடன் கொடுத்து மீள பெறமுடியாமல் Black Rock வழி தேடிக் கொண்டிருக்கிறது.
சீன மக்களின் சேமிப்புகளை இலங்கைக்கு கோடானு கோடிக்கணக்கில் கடன் கொடுத்த China Export Import Bank வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.
சம்பளம் கொடுக்க முடியாமல், இலங்கை அரசு, இராணுவம் முதல் அனைத்து அரச துறைகளிலும் ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அரச நிலங்கள், நிறுவனங்கள், கட்டடங்கள், இராணுவ தளபாடங்கள் மற்றும் ஆயுதங்களும் கூட விற்பனைக்கு வரவுள்ளன.
இலங்கையில் பிறந்தவர்களுக்கும், அவர்தம் உறவுகளுக்கும் நிரந்தர குடியுரிமைக்கான சட்டம் ஏற்கனவே அமுலாக்கப்பட்டு இந்த சொத்தெல்லாம் நாமே வாங்கி, பாதுகாப்பு நிறுவனங்கள் (Black Water போன்ற அமெரிக்க கூலிப்படைகள் இவ்வாறே பதியப்படுகின்றன.) என்ற போர்வையில் நமது சொந்த இராணுவ பாதுகாப்பில், அமெரிக்க, கனேடிய, ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலிய அரசுகளின் பின்னணியில் எமது மக்களின் எதிர்காலத்தை அவர்கள் மண்ணில் முதல்தர நாடாக மாற்றும் சந்தர்ப்பம் எம்மிடம் இன்று கிடைத்திருக்கிறது.
Threats - எமக்கு உள்ள ஆபத்துகளில் முதன்மையானது, எமது மக்களுக்குள் உள்ளேயே உள்ள தலைமைத்துவ ஆசையும் அதை நிறைவேற்ற வன்முறையை பயன்படுத்த தயங்காத கலாச்சாரமுமாகும்.
இரண்டாவது ஆபத்து, அயல்நாடான இந்தியாவின் தேவைகளை புரிந்துகொண்டு இந்திய அரசின் ஆழமான ஆட்சிபீடத்தின் (Deep State) நம்பிக்கையை பெற முடியாமையாகும்.
மூன்றாவது ஆபத்து சிக்கலான சர்வதேச அரசியலை புரிந்து அதன் நெளிவு சுளிவுகளுகூடாக எமது மக்களின் நன்மைகளை முன்னெடுப்பதற்கு உள்ள சிக்கல்கள்.
நான்காவது ஆபத்து சிங்கள தேசத்தின் நியாயமான தேவைகளை புரிந்துகொண்டு அந்த மக்களின் அபிமானத்தையும் நம்பிக்கையையும் பெற்று, இந்த சின்ன தீவில் அனைவரும் நிம்மதியாக வாழ உள்ள தடைகள்.
இறுதியாக உள்ள ஆபத்து எமது தனவந்தர்களையும், அறிஞர்களையும் நிபுணர்களையும் ஒன்று திரட்டி எமக்கு முன்னுள்ள சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்த உள்ள தடைகள்.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற போது, கனடா போன்ற நாடுகள் தம்மை ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் தமக்கு புகலிடம் தந்த அமெரிக்காவுக்கு ஐயன்ஸ்ரைன், ஒபன்ஹைமர் தலைமையில் யூத விஞ்ஞானிகள் அணுக்குண்டை செய்து கொடுத்தார்கள்.
தமக்கு இஸ்ரேலை உருவாக்கி தருமாறு இந்த யூத விஞ்ஞானிகள் தலைமையில் யூத காங்கிரஸ் கேட்டபோது அமெரிக்கா இணங்கியது.
அனைத்து அரபு நாடுகளும் இதனை எதிர்த்தன. அன்று பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த பிரித்தானியா, பலஸ்தீனத்தை விட்டுச்செல்லும் போது இஸ்ரேலை உருவாக்கி கொடுக்க ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டது.
வெறும் பாலைவனமாக எவரும் இல்லாமல் இருந்த நிலப்பரப்புக்கு எல்லை வகுத்து அந்த நிலத்தை தரலாம் என்றும் ஆனால் அதற்கு முதல் யூதர்கள் அங்கே குடியேறி அந்த நிலத்தை நாடாக்கி காட்ட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
இந்த நிபந்தனைக்கு பலஸ்தீனர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உலகம் முழுவதும் இருந்து யூதர்களை விமானங்கள் மூலமாக கொண்டு வந்து இறக்கி இஸ்ரேலை ஒரு நவீன நாடாக்க யூத தனவந்தர்களாலும் அறிஞர்களாலும் முடிந்தது.
அவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்பே பிற்காலத்தில் மொசாட் ஆக மாறியது.
இன்று நமது காலம்!