இரணைமடு நீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியுமா - சர்ச்சைக்கு தீர்வு எப்போது?  

 இரணைமடு நீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியுமா - சர்ச்சைக்கு தீர்வு எப்போது?  

இரணைமடு குளத்தின் நீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் பெலவத்தையிலுள்ள அமைச்சு கட்டிடத்தில் இடம்பெற்றதாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த கூட்டத்துக்கு ஒரு பங்குதாரராக நானும் அழைக்கப்பட்டிருந்தேன். 

கூட்டத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தலைமை தங்கியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் ராமநாதன் மற்றும் எஸ்.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

கூட்டத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சி விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு சிவமோகன் என்பவர் இரணைமடுக் குளம் கிளிநொச்சி மக்களுக்கே சொந்தமானது என்றும் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்குவதற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு இருந்தார். 

அதையடுத்து நான் இரணைமடுக்குளத்தின் பிரதான நீரேந்தும் பகுதி வவுனியா மாவட்டத்திலும் குளத்தின் பெரும்பகுதி முல்லைத்தீவு மாவட்டத்திலும் இருப்பதனால் இரணைமடுக்குளம் கிளிநொச்சி மக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தேன். 

மருத்துவர் என்ற முறையில் குடிநீர் தேவைக்கு விவசாயத்தை விட முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

மேலும் 1.3 மில்லியன் மக்கள் வாழும் வட மாகாணத்தில் 50% மேற்பட்ட மக்கள் யாழ் மாவட்டத்தில் வசிக்கும் நிலையில் அவர்களுக்கு அதிகரித்த நீர் தேவை இருக்கும் என்பதையும் சுட்டிகாட்டினேன் . 

அதற்கு பதிலளிக்க முடியாத சிவமோகன் சப்பைக்கட்டு நியாயமாக நீரை அருந்திய பின் விவசாயத்தினால் பெறப்படும் உணவை உட்கொள்வதாலேயே மனிதர்கள்  உயிர் வாழ முடியும் என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையிட்டு மனித உடலில் 60% நீராக இருப்பதுடன் அதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்று தெரிவித்தார். 

இந்த நேரத்தில் மனிதன் நீர் இல்லாமல் 3 நாட்களே உயிர் வாழமுடியும், ஆனால் உணவில்லாமல் 3 வாரங்கள் உயிர் வாழ முடியும் என்று நான் தெரிவித்தேன். 

கூட்டத்தில் கலந்து கொண்ட பொறியியலாளர்கள், ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் பெருமளவு நீர் குளத்தில் இருந்து வீணாக கடலுக்கு வெளியேறியதாகவும் நீர் தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் தேவையையும் யாழ்ப்பாண மாவட்ட குடிநீர் தேவையையும் தீர்க்க முடியும் என்று தெரிவித்தார்கள். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கிளிநொச்சி விவசாயிகளின் வாக்குகளை பெறுவதற்காகவும் அதேநேரம், யாழ்ப்பாண மக்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க விரும்பாத நிலையில் உறுதியான கருத்துகளை  தெரிவிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். 

தமிழரசு கட்சியின் தலைவராக வர விரும்பும் சிறிதரன் மாத்திரம் இரணைமடுக்குளம் விவசாயிகளுக்கே சொந்தமானது என்று தெரிவித்து மீண்டும் ஒரு தடவை தனது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையையும் அதேநேரம் தமிழ் மக்களின் தேசிய நலன்களுக்கு எதிரான  கருத்துகளையும்  வெளிப்படுத்தியிருந்தார். 

விடுதலைப் புலிகளின் காலத்திலேயே தமிழ் மக்களின் தேசிய நலன்களுக்காக இரணைமடு குளத்தின் நீரை யாழ்ப்பாணத்துக்கு வழங்குவதை ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான குடிநீரை மருதங்கேணியில் உள்ள கடல்நீரில் இருந்து நன்னீராக்கும் திட்டத்தின் மூலமாக பெறமுடியும் என்ற சிறீதரனின் கருத்தை உடனடியாகவே   வட மாகாண நீர் முகாமைத்துவ சபையின் முகாமையாளர் பாரதிதாசன் நிராகரித்திருந்தார்.

அந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் 1 கன மீட்டர் நீருக்கு அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று கூறி அவர் நிராகரித்திருந்தது சிறீதரனின் அறியாமையையும் துறைசார் நிபுணர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத அவரது அகங்காரத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. 

ஒருமித்த முடிவை எடுப்பதற்கு சிவமோகனும், சிறீதரனும் தடையாக இருந்த நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் 2 மாதங்களுக்குள் பங்குதாரர்களை கொண்ட குழுவொன்றை அமைத்து அவர்களின் அறிக்கையை பெற்று முடிவெடுத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக தெரிவித்தார். 

சிவமோகன் அதையும் ஏற்றுக் கொள்ளாமல் வடமாகாணசபை இயங்கிய போது அதன் அமைச்சர் ஐங்கரநேசனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஓன்று ஏற்கனவே  
இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு வழங்குவதற்கு எதிராக பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தார். 

அப்போது முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் சுன்னாகம் எரிபொருள் பிரச்சினையில் மின்சார நிறுவனத்துக்கு சார்பாக செயல்பட்டு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது மாத்திரமல்லாமல் இரணைமடுக்குளத்திலும் போலி நிபுணர் குழு அமைத்து தமிழ் மக்களின் தேசிய நலன்களுக்கு எதிராக செயல்பட்டிருப்பதை அறிந்து கொண்டேன். 

இறுதியாக அமைச்சர் ஜீவன் தொண்டமான், சிவமோகனிடம் அவர்களின் பிரநிதித்துவதுடன் குழு அமைக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கியதுடன் கூட்டம் முடிவடைந்தது. 

தமிழர் தேசிய நலன்கள் தொடர்பான தொலைநோக்கு பார்வையற்றவர்கள் வாக்குகளை சேகரிக்கும் ஒரே நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் தமிழர் பிரநிதிகளாக இருப்பது ஈழத்தமிழரின் சாபக்கேடு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் 2 தலைமுறைக்கு முன்னர் நெடுந்தீவு முதலான நீர்வளம் நலிந்த தீவு பகுதியில் இருந்து வந்து கிளிநொச்சியில் குடியேறியவர்கள் இன்று தம்மை கிளிநொச்சி விவசாயிகளாக அடையாளம் காட்டிக்கொண்டு தமது மூதாதையர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு குடிநீர் தர மறுப்பதை காலத்தின் கொடுமை என்று கூறலாமா?