தமிழர்களின் வாக்குகளுக்கு சுமந்திரன் தகுதியானவரா
(பொ. சிந்துயன், இறுதியாண்டு சட்டத்துறை மாணவர் பிரித்தானியா)
இலங்கையில் மற்றுமொரு நாடாளுமன்ற தேர்தல். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொருத்தமட்டில் ஏமாற்றம், நிராசை, காட்டிக்கொடுப்பு போன்ற பல அம்சங்களுடன் மேலுமொரு வாக்கெடுப்பு. எந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலமும் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதும், சிங்கள தேசத்திடமிருந்து நியாத்தை எதிர்ப்பார்க்க முடியாது என்பதும் உண்மை.
எனினும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தமிழர்கள் இழக்கவில்லை அல்லது இழக்க விரும்பவில்லை. ஈழத்திலும் சரி, புலம் பெயர்ந்த தேசங்களிலும் சரி, தமிழர்கள் தமது ஜனநாயக கடமைகளை மதித்து நடப்பவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கான நீதி ஓரளவேனும் கிடைக்க வேண்டுமென்றால், ஜனநாயக பாதையை தவிர்க்க இயலாது என்பது யதார்த்தம். எனவே நம்பிக்கையற்ற நம்பிக்கை என்ற அடிப்படையில் தான், ஈழத்தமிழர்கள், போர் மௌனிக்கப்பட்ட பிறகு தேர்தலில் வாக்களித்து வந்துள்ளனர்.
தந்தை செல்வா, அமிர்தலிங்கம், பின்னர் சம்பந்தர் ஆகியோரின் தலைமைகளில் தேர்தல்களை சந்தித்தாலும் இறுதியில் கிடைத்தது என்னவோ பூஜ்ஜியமே.
ஆனால், இப்போது நடைபெறவுள்ள தேர்தல் முன்னைய தேர்தல்களைவிட சற்று வித்தியாசமானதாகவே தோன்றுகிறது. மூத்த அரசியல் தலவர்கள் யாரும் களத்தில் இல்லை. சம்பந்தர் காலமாகிவிட்டார், அடுத்த இடத்திலிருக்கும் மாவை சேனாதிராசா தேர்தல் அரசியலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இப்போது தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் ‘தலைவர்கள்’ தாங்களே என்று தம்மைத்தாமே அடையாளப்படுத்தி கொள்பவர்கள் பல திசைகளில் பிரிந்து நிற்கின்றனர். இதில் சுமந்திரன் அணி, சிறீதரன் அணி, கஜேந்திரகுமார் அணி, சுரேஷ் அணி, சித்தர் அணி, விக்னேஸ்வரன் அணி என்று பட்டியல் நீளும். தமிழர்களிடையே உரிமைகளை வென்றெடுப்பதில் ஒரு ஒற்றுமை இல்லை என்பதை இது காட்டுகிறது என்றாலும், அந்த முரண்பாடுகள் ஏற்பட என்ன காரணம் என்பதையும் ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.
இதில் பல்தரப்பினர் சுட்டிக்காட்டும் ஒரு நபர் சுமந்திரன். அவரே தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் மக்களின் வாக்குகள் பிரிவதற்கு பிரதான காரணம் என்பதை தாயகத்தில் பலருடன் பேசிய போது அறிய முடிந்தது. தமிழர்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதிலாக அவர் ஒரு ‘பிரிவினை சக்தியாக’ உள்ளார் என்று ஏராளமானவர்கள் கூறுகின்றனர்.
”அவர் ஆயுதம் ஏந்தாத ஒரு துணை இராணுவக் குழுவினர் போன்று செயல்படுகிறார், சிங்கள அரசியல் கட்சிகளின் கைக்கூலியாக உள்ளார், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக உள்ளார், தாமே அடுத்த தமிழினத் தலைவர் என்று காட்ட முற்படுகிறார்” என்றெல்லாம் அவர் மீதான விமர்சனங்கள் தாயகத்தில் உள்ளன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழர்களின் எதிர்க்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு தேர்தலாக இருக்கலாம் என்பதால் பலருடன் உரையாடுவதை தவிர்க்க இயலவில்லை. மன்னார் கடற்கரை தொடங்கி போர்க்களமான முல்லைத்தீவு கடற்கரை வரை பலருடன் இந்த தேர்தல் குறித்து அவர்களின் எண்ணம், சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கான தீர்வை எப்படி எட்டுவதை என்பதை ஆராயும் ஒரு சட்ட மாணவனாக பலருடன் கதைத்தேன்.
எடுத்த எடுப்பிலேயே அவரை ஒரு அரசியல் வியாபாரி என்று விபரித்தார் போர் அழிவுகளின் நேரடி சாட்சியாக இருக்கும் செல்லையா சிவநேசன்*.
“கடந்த தேர்தலிலேயே அவர் கள்ளத்தனமாகத்தான் வென்றார். அவர் தமிழர்களுக்காக வேலை செய்வதில்லை. தமிழர்களின் நலன்கள் மற்றும் அபிலாசைகளை மழுங்கடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து வேலை செய்கிறார் என்பது இங்கு ஊரறிந்த இரகசியம், சுமந்திரன் தமிழர் தியாக உணர்வுகளின் வியாபாரி”.
நாட்டின் முன்னணி சட்டத்தரணிகளில் ஒருவரான அவர் மீது இப்படியன விமர்சனம் இருப்பதில் நியாயமுள்ளதா என்பதை ஆராய முற்பட்டால், அவர் மீதான விமர்சனம், கோபம், வெறுப்பு, நம்பிக்கையின்மை போன்றவையே கூடுதலாக வெளிப்பட ஆரம்பித்தன.
தமிழர்கள் எப்போது தமக்கென்று அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலோபாயக் கொள்கைகளை வகுக்கக்கூடிய நிறுவன மயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை உருவாக்கி அவற்றுக்கூடாக தமது தேச விடுதலைப் போராட்டத்தை நகர்த்த முற்படுகிறார்களோ அன்று தான் அழிவு நிலையில் இருக்கும் தமிழ் தேசியம் பாதுகாக்கப்படும்.
எனினும் இதற்கு மாறாகச் செயல்படும் நபர்களில் சிறந்த உதாரணம் ஒன்று என்றால் அது மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தான் எனும் குரல்கள் பரந்துபட்ட அளவில் ஒலிக்கின்றன.
சம்பந்தரை தமது கைப்பாவையாகப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் சுமந்திரன் கொண்டுவந்தார், அதை பயன்படுத்தியே தமிழ் தேசியத்திற்கு எதிரான செயல்பாடுகளைச் செய்தார், இறுதியில் கூட்டமைப்பு என்ற ஒன்றையே இல்லாமல் செய்துவிட்டார் என்ற கடும் குற்றச்சாட்டை அவர் மீது பலர் வைக்கின்றனர்.
இதில் குறிப்பாக கனடாவில் வசிக்கும் அவரது நெருங்கிய உறவினரும், ஊடகவியலாளர் என்ற போர்வையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுத்து வரும் ஒரு நபரும் இணந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, அதை சர்வதேச அளவில் பரப்பி வருகின்றனர் என்பதை கனடாவிலுள்ள தமிழர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் சுமந்திரன் மற்றும் அவரது வலதுகை என்று கூறப்படும் சாணக்கியன் இருவரும் கனடா சென்று அங்கு தமிழ் மக்களை சந்திக்க முற்பட்ட சமயம் என்ன நடைபெற்றது என்பதை கனடாவிலுள்ள அனைவரும் அறிவார்கள். ஒரு கூட்டத்தில் சுமந்திரனை பேசவிடாமல் கனடா வாழ் தமிழர்கள் தடுத்து அவரை அரங்கைவிட்டு வெளியேற்றியதை இன்றும் சமூக ஊடகங்களில் காண முடியும்.
சுமந்திரன் மிகவும் சாதாரணமாக படிவங்களை நிரப்பும் ஒரு சட்டத்தரணியாகவே தமது தொழிலை தொடங்கி, தொடர்புகள் மற்றும் காட்டிக்கொடுப்பின் மூலம் சிங்கள கட்சிகள், தலைவர்களின் அன்பை பெற்று தம்மை வளர்த்திக்கொண்டார் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
”2009ற்கு முன்னர் காலி வீதியில் கடவுச்சீட்டு, மற்றும் காப்புறுதி விண்ணப்பபடிவங்களைப் பூர்த்தி செய்து வழங்கி வந்த ஒரு வணிக எண்ணம் கொண்ட சட்டத்தரணி தான் இந்த சுமந்திரன்! தான் ஒரு உண்மையான மனித உரிமை சட்டத்தரணியோ அல்லது உண்மையான மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை சுமந்திரன் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார். அவர் எந்த பல்கலைக்கழகத்திலும் மனித உரிமை சட்டத்தையோ அல்லது சர்வதேச சட்டத்தையோ படித்ததாக எந்த ஆதாரமும் இல்லை. 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு பிரவினைக்கு எதிராக ரெலோ தாக்கல் செய்த வழக்கில் சுமந்திரன் ஆஜரான போது அவர் எந்த வித தொழில்சார் ஒழுக்கமும் இன்றி செயற்பட்டு மனுதாரர்களுக்கு தெரியாமல் வழக்கை வாபஸ் பெற்றார். அதன் காரணமாக 2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சுமந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் முதன்முறையாக ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிந்தெடுக்கப்படவில்லை” என்று அவரை பாரதூரமாக விமர்சித்தார் கனகராசா முருகுராசா*. சுமந்திரனை தான் 30 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாக அருகாமை ஊர்காரர் என்ற வகையில் அவதானித்து வருவதாகவும் அவரது பல விடயங்கள் தனக்கு தெரியும் என்கிறார்.
இதேவேளை சுமந்திரன் குறித்து வெளிப்படையாகவே பலர் ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
2015 ல் சுமந்திரன் ஜெனிவா சென்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணங்களின் படி இனப்படுகொலை அல்ல என்று கூறியதாக 2015 டிசம்பரில் கலாநிதி. எஸ்.ஐ. கீதபொன்சலன் கொழும்பு டெலிகிராப்பில் எழுதினார்.
1997 டிசம்பரில் தமிழ் தகவல் மையம் “ சர்வதேச இனப்படுகொலை குற்றம் , இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வழக்கு ” என்ற அறிக்கையை வெளியிட்டு ஜேர்மன் சட்ட நிபுணரும் எஸ்.ஓ.ஏ.எஸ் (SOAS) அமைப்பின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ். லூட்ஸ் ஒட்டோ என்பவரால் மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை தான் என முதலில் அறிவித்தது லண்டன் பல்கலைக்கழகம்.
”2014 ஆம் ஆண்டில், மன்னார் மறை மாவட்டத்தின் காலஞ்சென்ற ஆயர்.ராய்ப்பு ஜோசப் ஆண்டகை அமெரிக்க இராஜ தந்திரி ஸ்டீபன் ராப்புக்கு போதுமான ஆதாரங்களுடன் போர் முடிவடைந்த பின்னர் நடந்து வரும் கட்டமைப்பு இனப்படுகொலை குறித்து விளக்கினார். இலங்கையில் தமிழர்களுக்கு என்ன நடக்கிறது? என சுமந்திரனுக்கு தெரியாதா?” என்று வினவுகிறார் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சூசை மைக்கேல் மரியதாஸ்*.
தமிழ் மக்களுக்கு உள்நாட்டு ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை இல்லை எனவும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு உரிய நடவடிக்கைகளை பரித்துரை செய்யுமாறு ஐ.நா விசாரணைக்கு அழைப்பு விடுத்து வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் 09.பெப்ரவரி.2015 அன்று பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்த போதிலும் சுமந்திரன் எதிர்த்தார். இதையெல்லாம் சுமந்திரனால் மறுக்க முடியுமா என் மறுகேள்வி வைத்தார் மற்றொரு அரசியல் பிரமுகர்.
”2015 செப்டெம்பரில் ஜெனிவாவில் திரு.லதன் சுந்தரலிங்கம் நேர்காணல் செய்த போது வடமாகாண சபை தீர்மானம் “ முட்டாள்தனமான” நடவடிக்கை, நீதியரசர். ஊ.ஏ.விக்னேஸ்வரன் தனது ஆலோசனைக்கு எதிராக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் இனப்படுகொலை விசாரணைக்கான கதவை மூடிவிட்டார்” என்று சுமந்திரன் குற்றம் சாட்டியிருந்தாரே என்கிறார் அந்த அரசியல் பிரமுகர்.
“அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதில் சுமந்திரன் வல்லவர், சூழ்ச்சிகளை திட்டமிட்டு செய்வதிலும் அவர் கெட்டிக்காரர்” என்று அவரை நன்கு அறிந்த பலர் கூறுகின்றனர். அதற்கான காரணங்களையும் அவர்கள் சுயமாக மட்டுகின்றி, ஊடகங்களில் வந்த செய்திகளுடன் மேற்கோள் காட்டுகின்றனர்.
கடந்த 2017 ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனவரி 13 ஒரு நிகழ்வில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுமந்திரன் கடைசி நேரத்தில் தனது பயணத்ததை இரத்து செய்தார். காரணம் சுமந்திரனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கூறியதாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கினார். ஐக்கிய நாடுகள் சபைக்கும் உலக நாடுகளுக்கும், ‘இலங்கையில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் காணப்படுகின்றது’ என்பதை போலியான முறையில் சித்தரித்து வெளிக்காட்டினார். இக்கொலை முயற்சியுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களாக 11 சிங்களவர்களும் 4 தமிழர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 11 சிங்களவர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ஆனால் அந்த 4 அப்பாவித் தமிழர்களும் இன்னும் சிறையில் உள்ளனர். அவர்களில் அங்கவீனர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர் என்று விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சிங்கள மக்களின் சார்பாக தொடர்ந்து செயல்பட்டு, அதன் மூலம் தான் மட்டுமல்லாமல், தனது மகளுக்கும் சலுகைகளை பெற்றுக்கொடுத்தவர் சுமந்திரன் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த சிங்கள அரசியல் தலைவர்களுடன் அவர் இணைந்து செயல்பட்டார், அதன் பெறுபேறாக சிலபல சலுகைகளைப் பெற்றுக்கொண்டார் என்றும் அவரை அறிந்த கொழும்பு பெண்ணொருவர் கூறுகிறார். சுபாசினி தர்மராசா* என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட அவர்:
”சுமந்திரனை தமிழ் மக்களின் பிரதிநிதி எனக் கூறக்கூடாது. தனக்கு தேவையானவற்றை மட்டுமில்லாமால் தனது மகளுக்கும் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அலுவலகத்தில் வேலை ஒன்றை பெற்றுக்கொடுத்தார். மேலும் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் மெய்பாதுகாவலர்களைப் பெற்றுக்கொண்டார். இனப்படுகொலையை மறைப்பதற்காக மஹிந்தவுடன் கைகோர்த்து பல வேலைத்திட்டங்களைச் செய்தார். அவர் தமிழினத்துக்கு எதிராக துரோகங்களை மட்டுமே செய்துள்ளார். இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. 2017 ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்காக சில நிபந்தனைகளை முன்வைத்தது. அதில் ஒன்று இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பொறுப்பு கூறலை முன்வைக்க வேண்டும் என்பதாகும்.இதனையடுத்து அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சுமந்திரன் இடையே இரகசிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன் விளைவாக பொறுப்புக்கூறலை நிரூபிக்க உள்நாட்டு விசாரணையே தேவையென சர்வதேச பிரதிநிதிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பட்டது. இதனை சரியாக செய்து முடிப்பதற்காக பிரித்தானியாவின் ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழகம் இலங்கைக்கு வழங்கிய இலவச புலமைப்பரிசிலினை ரணில் சுமந்திரனுடைய மகளுக்கு வழங்கினார்”.
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல கொடுமைகள் வெளிவராமல் தடுப்பதற்கு சிங்கள அரசுகளுடன் இணைந்து சுமந்திரன் வேலைகளைச் செய்தார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இதை தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்களே கூறுகிறார்கள், ஆனால் வெளிப்படையாக பதிவு செய்ய தயங்குகிறார்கள். நாட்டில் சூழல் அப்படி என்று அவர்கள் கூறுகின்றனர்.
“போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்து சிங்கள அரசையும் அதன் தலைவர்களையும் காப்பாற்றுவதில் சுமந்திரன் முன்னின்று செயல்படுகிறார்” என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமது குடும்ப உறவுகளை தேடும் குழுவிலுள்ள பெண் சந்திரகாந்தி அரசநாயகம்* கூறுகிறார். தம்மைப் போன்ற பெண்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை மழுங்கடிக்க முழுமூச்சாக முன்னின்று செயல்படுபவர் சுமந்திரன் என்றும், அவருக்கு எதிராகவும் தாங்கள் போராட்டங்களை நடாத்தியுள்ளதாவும் அவர் தெரிவித்தார். தமிழர்களின் சார்பாக என்று கூறும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் தங்களுக்கு சந்தேகம் உள்ளது எனவும் அழுத்தமாக கூறினார் சந்திரகாந்தி*
“எமது இனத்தை கொன்றொழித்தவர்களை காப்பாற்ற செயல்படும் ஒருவர் எப்படி எமது ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்? ஜனநாயக நெறிமுறைகளை மீறி கடந்த தேர்தலில் தோல்வியை எதிர்கொண்ட நிலையில், எப்படி அவர் சசிகலா ரவிராஜை மீறி வென்றார், அவரால் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் எப்படி வர முடிந்தது, இதற்கெல்லாம் உண்மையான பதில் எங்கே?”
என் வெற்றியை சுமந்திரனுக்கு விட்டுத்தருமாறு எனது பிரதான இணைப்பாளர் மிரட்டப்படுகிறார்’ என சசிகலா ரவிராஜ் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார் என்பதையும் அவர் இப்போது சுட்டிக்காட்டுகிறார்.
இப்படி மிகவும் கடுமையான விமர்சனம் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு இடையில் தான் சுமந்திரன் மீண்டும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
(*பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)