மக்களவைத் தேர்தலில் வென்ற 543 எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!

மக்களவைத் தேர்தலில் வென்ற 543 எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ‘தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிஃபார்மஸ்’ மேற்கொண்ட ஆய்வில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 543 மக்களவை உறுப்பினர்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம், அதிக அளவிலான செல்வந்தர்கள் மக்களவைக்குள் தங்களது என்ட்ரியை கொடுத்துள்ளனர் என்பது தெரிகிறது.

கடந்த 2019 தேர்தலில் இந்த எண்ணிக்கை 88 சதவீதமாக இருந்தது. அதாவது, அந்த முறை மொத்தம் 475 எம்.பி-க்கள் கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2014 தேர்தலில் வெற்றி பெற்ற கோடீஸ்வர எம்.பி-க்களின் எண்ணிக்கை 443. அதாவது, அப்போது 82 சதவீதமாக இருந்தது. 2009 தேர்தலில் 315 எம்.பி-க்கள் கோடீஸ்வரர்களாக இருந்தனர்.

தற்போது மக்களவை தேர்தலில் வென்றுள்ள கோடீஸ்வர எம்.பி-க்களில் ஆந்திர மாநிலம் குண்டூர் தொகுதியில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் சந்திர சேகர், முதலிடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.5,705 கோடியாக உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் பாஜக உறுப்பினர்கள் உள்ளனர். தெலங்கானாவை சேர்ந்த எம்.பி விஷ்வேஷ்வர் ரூ.4,568 கோடிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ரூ.1,241 கோடிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார் தொழிலதிபரும், எம்.பி-யுமான நவீன் ஜிண்டால்.

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவின் 240 எம்.பி-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.50.4 கோடிகளாக இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 99 காங்கிரஸ் எம்.பி-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22.93 கோடிகளாக உள்ளது. 22 திமுக எம்.பி-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.31.22 கோடிகளாக உள்ளது.

மேலும், ரூ.10 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள எம்.பி-க்களின் எண்ணிக்கை 227 என உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி ஜோதிர்மய் சிங் மஹதோவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5.9 லட்சமாக உள்ளது. இதன் மூலம் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் குறைந்த சொத்து வைத்துள்ள நபராக அவர் அறியப்படுகிறார்.