உலக சாரணர் ஸ்தாபகர் தினம் இன்று அனுஸ்டிப்பு!

உலக சாரணர் ஸ்தாபகர் தினம் இன்று அனுஸ்டிப்பு!

உலக சாரணர் ஸ்தாபகர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. 

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ரொபர்ட் பேடன் பவுல் பிரபுவின் (Robert Badan-Powell) பிறந்த தினத்தை சாரணர்கள் உலக சாரணர் ஸ்தாபகர் தினமாக அனுஸ்டிக்கினறனர்.

இதன்போது சாரணிய கொடி, தேசிய கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஸ்தாபகர் பேடன் பவுல் பிரபுவின் சிலைக்கு கழுத்துப் பட்டி அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

"எதற்கும் தயாராக இரு!" என்னும் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப்படும் பேடன் பவல், 1857-ம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி பிறந்தார். 

இளம் வயதில் ராணுவத்தில் இணைந்து கொண்ட பேடன் பவல் இந்தியா, கனடா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிந்தார். 

1907-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்த போது இளைஞர்களுக்கான சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தார்.

இவர் சிறுவர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை வெளியிட்டார்.

ஜாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப் பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டை மாணவர்களுக்குக் கற்றுத் தருவது சாரண இயக்கத்தின் செயல்பாடாகும். 

வீதி விதிமுறைகளை மேற்கொள்ளுதல், மரங்களை நடுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், சமூக உறவுக்கு பாலமாக செயல்படுதல் போன்ற பணியினை சாரணர் இயக்கத்தினர் செய்கிறார்கள்.

1910-ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. இன்று எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது. 

இவரை, இங்கிலாந்தின் மன்னர், 'கில்வெல் பிரபு' எனப் பெயர் சூட்டி, பாராட்டி கௌரவித்தார்.

1941-ம் ஆண்டு பேடன் பவல் உயிரிழந்தார். இன்று உலகில் பெருமளவு நாடுகளில் பலகோடி சாரணர் இயக்கங்கள் உருவாகி, பேடன் பவலின் தொலை நோக்கை நிறைவேற்றி வருகின்றன.

சாரணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பலர் இன்று உலகில் பல துறைகளிலும் பெயர் பதித்திருப்பதைக் காணலாம்.

உதாரணமாக, முதன்முதலாக சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீல்ஆம்ஸ்டிராங் ஒரு சாரண இயக்கத் தொண்டரே என்பது சிறப்பம்சமாகும்.

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் இடம்பிடித்த பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் போன்றோர்களும் சாரணர்களே என்பது குறிப்பிடத்தக்கது.