வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த தாழமுக்கம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழை கொண்ட காலநிலை காணப்படும். நாளை மறுதினம் முதல் அதாவது எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மழை கொண்ட காலநிலை ஓரளவு சீரடையும் சாத்தியமும் காணப்படுகின்றது
நேற்றைய (23.11.2024) தினம் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியின் கிழக்காகவும் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாகவும் காணப்பட்ட தாழமுக்க பகுதியானது (Low Pressure Area) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (24.11.2024) நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Well Marked Low Pressure Area) வலுவடைந்து, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு மேலாக காணப்படுகின்றது.
இது தொடர்ச்சியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளைய தினம் (25.11.2024) தெற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக ( Depression) வலுவடையும்.
அதன்பின்னர் இது அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் கரையோரத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இன்று (24.11.2024) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில்,
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்க பகுதியானது (Low Pressure Area), மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, நாளை தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்கமாக (Depression) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது மேலும் நகர்ந்து, இலங்கையின் வட கடலோரத்தை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினால் இலகங்கையின் அனேகமான பிரதேசங்கள் மேகமூட்டமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன்,
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை வேலைகளில் அல்லது இரவு வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 150mm மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சியும், வட மத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் 100mm மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப் படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 30km/h தொடக்கம் 40km/h வரையான வேகத்தில் காற்று வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் காற்றும் பலமானதாக வீசும். எனவே பொதுமக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதத்தை குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் முதல் காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியத்தில் மீனவர் சமுதாயம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் இன்று (24.11.2024) முதல் மறு அறிவித்தல் வரும் வரை துணிகர செயல் எதிலும் ஈடுபட வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
இலங்கைத்தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30km/h - 40km/h வரையான வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசும்.
இந்த காற்றின் வேகமானது மன்னார் முதல் காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் ஊடான ஹம்பாந்தோட்டை வகையான கடற் பிராந்தியத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60km/h - 70km வரை அதிகரித்து வீச கூடும்.
மேற்குறிப்பிடப்பட்ட கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் ஏனைய கடற் பிராந்தியங்கள் சாதாரண கொந்தளிப்பாக காணப்படும் எனவும்,
கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் அந்த கடல் பிராந்தியமானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் அக்கடல் பிராந்தியத்தில் காற்றும் பலமானதாக வீசும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.